பிக்பாஸ் 3-இல் கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் அபிராமி. பிக்பாஸில் அபிராமிக்கு நேர்மறை, எதிர்மறை ஆதரவுகள் உண்டு. ஆனாலும் எதிர்மறை ஆதரவால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் அபிராமி. பிக் பாஸ் புகழுக்குப் பின் திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கினார் அபிராமி.
குறிப்பாக தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. 3நாயகிகளில் ஒருவராக தன்னுடைய பங்கை சிறப்பாகக் கொடுத்து இருந்தார் அபிராமி. அதற்குப்பின் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் திரையில் அபிராமியை காணமுடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய சினிமா வாய்ப்புகள் குறித்தும், சினிமா துறை குறித்தும் அபிராமி வெளிப்படையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலாட்டாவுக்கு பேசிய அபிராமி, 2020க்கு பிறகு கொரோனா குறுக்கே வந்துவிட்டது. அதனால் பட வாய்ப்புகள் இல்லை, படங்கள் சரியாக போகவில்லை என பொதுவாக கூறினார்கள். அதையெல்லாம் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால், ஒரு நாயகி என்றால் டான்ஸ் ஆட வேண்டும், நடிக்க வேண்டும், மொழித்திறமை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழ், தமிழ் என பேசுகிறார்கள். எனக்கு 4 மொழிகள் தெரியும்.
எத்தனை தமிழ் பேசும் நடிகைகள் பெரிய ஆட்களாக இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இருக்கிறார்கள். நான் யாரையும் குறைசொல்லவில்லை. தமிழ் வராதவர்கள் லீடாக நடிக்கும் படங்களில் எங்களை கேரக்டராக நடிக்கவே கூப்பிடுவார்கள். தமிழ் பேச தெரியாதவர்களை அழைத்து நடிக்க வைத்துவிட்டு பிறகு டயலாக் சரியாக வரவில்லை என குறை கூறுகிறார்கள். அது எப்படி குறை கூற முடியும்? தெரிந்துதானே படத்துக்கு அழைக்கிறீர்கள்.
குறிப்பாக தமிழ் சினிமாத்துறையில் நாயகிகளை தேர்வு செய்பவர்களை விடவும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களே வாய்ப்புகளை கெடுக்கின்றனர். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கமாட்டார் என்பதுபோல நடந்து கொள்கின்றனர். திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். ஒரு நடிகையிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? நடிக்க வேண்டும், டயலாக் டெலிவரி, டப்பிங், மொழித்திறமை இவைதானே. இதற்குமேல் என்ன வேண்டுமென்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து கருத்து பதிவிட்டுள்ள பலரும் அபிராமிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஆனாலும் வீடியோவில்தான் ஒரு சமஸ்கிருத ஸ்டூடண்ட் என்றும், தனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது எனவும் அவர் பெருமையாக பேசுவதையும் பலர் கிண்டலடித்துள்ளனர். இந்த வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.