தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி. இவரும் அரவிந்த் சாமியும் இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மெய்யழகன் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.


மெய்யழகன் ட்ரெயிலர் ரிலீஸ்:


96 படத்தை இயக்கிய பிரேம் இந்த படத்தை இயக்கியிருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது போலவே, படத்தின் ட்ரெயிலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் மிக மென்மையான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாவது சமீப ஆண்டுகளில் பெருமளவில் குறைந்துள்ளது. ரத்தம், வன்முறை, சண்டை அல்லது கதாநாயக முக்கியத்தவம் கொண்ட படங்களே அதிகளவில் வெளியாகி வரும் சூழலில், மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்டது.


எப்படி இருக்கிறது ட்ரெயிலர்?


இந்த சூழலில், மிக மென்மையான கிராமத்து பின்னணியில் மெய்யழகன் திரைப்படம் உருவாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சாமி சந்திக்கும் கிராமத்து நிகழ்வுகளை படமாக எடுத்துள்ளனர்.


கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான குணாதிசயத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பிரபல நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவதர்ஷினி, இளவரசு போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ட்ரெயிலர் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.


இந்த படத்தை பிரபல ஜோடியான சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்திற்காக யாரோ.. யாரோ என்ற உருக்கமான ஒரு பாடலைப் பாடியுள்ளார்.


கார்த்திக் நடிப்பில் கடைசியில் வெளியான சர்தார் படத்திற்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஏதும் அமையவில்லை. அவர் நடிப்பில் கடைசியில் வெளியான ஜப்பான் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்த சூழலில் தற்போது மெய்யழகன் படம் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் மூலமாக நடிகர் கார்த்தி மீண்டும் தனது வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரும் அரவிந்த்சாமிக்கு இந்த படத்திற்கு பிறகும் மீண்டும் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.