தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் யோகி தன் மோதான மோசடி புகாருக்கு நெத்தியடி போல் பதிலடி கொடுத்துள்ளார். 


லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடியில் நடித்து வந்த யோகி பாபு அமீர் நடிப்பில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பையா, அட்டக்கத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா, பொம்மை நாயகி, மாவீரன், துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்த யோகி பாபு, ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜவான் படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். 


தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருக்கும் யோகி பாபு, பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கும் லக்கி மேன் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளிவர உள்ள நிலையில் லக்கிமேன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்பொழுது பேசிய யோகிபாபு, ”லைஃபில் எல்லாரும் வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறோம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் எல்லாரும் மேலே வரும். சிலர் நெகட்டிவாக பேசுகிறார்கள். நான் ஷூட்டிங் வரவில்லை என்று பேசுகிறார்கள். ஷூட்டிங் வராமல் நான் எங்கே கொளத்து போகப்போறேன். சரியான தேதியை கொடுத்தால் நான் சரியான நேரத்தில் வந்துடுறேன். 


உங்களின் பணப்பிரச்சனையால் என்மேல் சுலபமாக பழிப்போடலாம். 4,5 காட்சிகளை எடுத்துவிட்டு எங்களை வைத்து பிசினஸ் செய்ய வேண்டாம். இதனால் மற்றவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டால் தவறாகி விடுகிறது. பலர் என்னை நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்து வருகிறேன். கதை கேட்டு நான் படத்தில் நடிப்பதில்லை. கதையை சொல்ல வருபவர்களின் கஷ்டத்தை கேட்டு தான் நடிக்கிறேன். இதனால் பல இயக்குநர்கள் உருவாகியுள்ளனர். இதை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருப்பேன். என்னை பற்றி என்ன சொன்னாலும் கவலையில்லை” என தன்னை பற்றிய மோசடி  விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். 


சென்னையை சேர்ந்த ஹாசீர் என்பவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 2020ம் ஆண்டு அறிமுக இயக்குநரான கௌசிக் ராமலிங்கம் என்பவர் இயக்க இருந்த ஜாக் டேனியல் படத்தில் யோகி பாபு, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க இருந்ததாகவும் , அதில் நடிப்பதற்காக யோகிபாபுவுக்கு ரூ.65 லட்சம் சம்பளமாக வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.20 லட்சத்தை முன்பணமாக பெற்று கொண்ட யோகி பாபு படப்பிடிப்பை தொடங்கியபோதும், நடிக்க வராமல் ஏமாற்றி வந்ததாகவும் புகாரில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.