தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக உலா வருபவர் நடிகர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
பழசை மறக்கமாட்டேன்:
இவர் சமீபத்தில் ஜோரா கைய தட்டுங்க என்ற படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர் தனது சம்பளபாக்கி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆதங்கத்துடன் பேசினார். அந்த நிகழ்ச்சியில், இந்த படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப கஷ்டபட்டு இந்த படத்தை பண்ணாரு.. என்னால இல்ல. பணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தால ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை பண்ணாரு. அதுக்காக இந்த படம் ஓடனும் சார். கடவுள் உங்களை சப்போர்ட் பண்ணனும்.
15 வருஷத்துக்கு முன்னாடி படத்துல பிரஜன் ஹீரோ. அவருக்கு நண்பனா 1000 ரூபாய் சம்பளத்துல நடிச்சேன். ரொம்ப வருஷமா கான்டக்ட் இல்லாம இருந்தது. 5,6 வருஷம் கழிச்சு ஒரு போன் வந்தது. அந்த குரல் கேட்டுதான் வினித் சார் எப்படி இருக்கீங்க?னு கேட்டேன். ஏன்னா நான் பழசை மறக்க மாட்டேன்.
5 நிமிஷம்தான் கதை சொன்னாரு. அவரோட பிரச்சினையையும் சொன்னாரு. அப்படி பண்ண படம்தான் இந்த படம். நான் எங்கசார் சம்பளம் முடிவு பண்றேன். என் சம்பளத்தை வெளியில இருக்கவங்கதான் முடிவு பண்றாங்க. என் சம்பளம் எவ்வளவுனு எனக்கே தெரியாது சார்? அந்த சூழல்லதான் நான் ஓடிக்கிட்டு இருக்கேன்.
லிஸட் தரட்டுமா?
நீங்க சொன்னமாதிரி நாங்க எல்லாம் சம்பளம் கம்மி பண்றோம் சார். நீங்களே அனுப்புங்க. யாரை வேணும்னாலும் அனுப்புங்க. சொல்ற சம்பளத்தை நீங்களே வாங்கி கொடுத்துடுங்க. அதை கேட்டாதான் நாங்க எதிரி ஆகிடுவோம். அதுதான் உண்மை. யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசுறாங்க.
என் அசிஸ்டன். என்கிட்ட 3, 4 வருஷமா வேலை பாத்த தம்பி ஹீரோவா படம் பண்ணப்போறேனு சொன்னான். ரொம்ப நல்ல விஷயம். ரெண்டு நாள் ஒர்க் பண்றீங்களானு கேட்டான். எவ்ளோ பேருக்கு ஒர்க் பண்றேன். சரி வாடா பண்லாம்னு பண்ணேன். அந்த படத்துக்குத்தான் 7 லட்சம் கேட்டேன், 8 லட்சம் கேட்டேனு சொன்னாங்க. இது என் படம். நான்தான் வரனும். இல்லாட்டி தப்பாகிடும்.
எனக்கு எவ்ளோ பேரு பணம் தரனும்னு தெரியுமா? லிஸ்ட் எடுத்து தரட்டுமா? உங்களால வாங்கிக் கொடுக்க முடியும்னு சொல்லுங்க. எடுத்துக் கொடுக்குறேன். கண்டிப்பாக கொடுக்குறேன். இப்படி பேசாதீங்க. என்னைப் பொறுத்தவரை சப்போர்ட் பண்ணித்தான் போறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இதனால், சற்று நேரம் பரபரப்பாக அந்த இடம் காணப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக உலா வரும் யோகிபாபுவின் சம்பளம் குறித்தும், அவரால் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் யோகிபாபு இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகிபாபு சமீபகாலமாக நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.