ஆஸ்கருக்கு பிறகு அதிகம் கவனிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகராகி இருக்கிறார் வில் ஸ்மித். கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கர் விருதுகளில், வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தை நகைச்சுவை நடிகர் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் மேடைக்கு வந்து கிறிஸின் முகத்தில் அறைந்தார். அன்று இரவே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் வென்றார்.


இந்த சம்பவத்திற்குப் பிறகு, வில் ஸ்மித் அகாடமி மற்றும் கிறிஸ் ராக் இருவரிடமும் மன்னிப்பு கேட்டார். அவர் அகாடமியில் இருந்து தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். அகாடமி கடந்த மார்ச் 30ஆம் தேதி நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவித்தது. அதில்,  வில் ஸ்மித் ஆஸ்கர் விருது விழா அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 






இந்தியாவில் வில் ஸ்மித்..


இந்நிலையில் ஆஸ்கர் பரபரப்பு அடங்கிய நிலையில் வில் ஸ்மித் இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த நிலையில் வில் ஸ்மித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஏதேனும் படப்பிடிப்பு தொடர்பாக இந்தியாவுக்கு வந்தாரா என்ற எதிர்பார்ப்பு வந்த நிலையில் ஆன்மீக பயணத்துக்காகவே வில் ஸ்மித் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய வில் ஸ்மித்,  இஸ்கான் கோவில் ஒன்றில் பூஜைகளில் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது.


மேலும் ஈஷாவின் சத்குருவையும் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இந்திய பயணத்தின்போது ஆன்மீக பயணம், தியானம் போன்ற விஷயங்களிலும் ஈடுபட்டு மன அமைதியை நாட வில் ஸ்மித் வந்திருப்பதாகவும், அதனால் சத்குருவுடன் சந்திப்பு நிகழலாம் எனவும் கூறப்படுகிறது. ஆன்மீக பயணத்துக்காக வில் ஸ்மித் இந்தியா வருவது இது முதல்முறை அல்ல, ஏற்கெனவே 2019ல் இந்தியா வந்த வில் ஸ்மித் ஹரித்வார் சென்று வழிபட்டார். அப்போதும் சத்குருவுடன் சந்திப்பு நிகழ்த்தினார்.