நேசிப்பாயா
குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். முதல் படம் பெரியளவில் கவனம் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து வெளியான அறிந்தும் அறியாமலும் , பட்டியல் ஆகிய படங்கள் அவருக்கு அடையாளம் கொடுத்தன. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பக்கபலமாக இருந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த பில்லா படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன். ஏற்கனவே இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பில்லா. இந்த படத்தை தமிழிலில் 1980 ஆம் ஆண்டு ரீமேக் செய்து நடித்தார் ரஜினி.
இதனைத் தொடர்ந்து பில்லா படத்தில் அஜித் நடிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்தன. ஆனால் முந்தைய இரண்டு படங்களைக் காட்டிலும் இந்த படத்திற்கு தனது ஸ்டைலால் தனித்துவமான லுக்கை கொடுத்தார்கள் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன். அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் பில்லா படம் குறிப்பிடத் தகுந்தது.
ரஜினியின் பில்லா படம் ஓடவில்லையா ?
தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். நாளை ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது ரஜினியின் பில்லா படம் பெரிதாக ஓடவில்லை என்று விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
" ரஜினியின் பில்லா படம் வெளியானபோது பெரிதாக ஓடவில்லை. சரியா ஓடாத படத்தையா நான் எடுக்கப் போகிறேன் என்று ரொம்ப யோசித்தேன். அதன் பின் தான் அந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயத்தை பார்த்தேன். அந்த காலத்திலேயே இவ்ளோ டார்க் கேரக்டர் எடுத்து பண்ணியிருக்கிறார்கள் என்பது கிரேட் ஐடியாவாக தெரிந்தது. அதை தான் பில்லா படத்திற்காக நான் எடுத்துக் கொண்டேன்" என அவர் தெரிவித்தார்.
பில்லா படம் ரஜினியின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையில் விஷ்ணுவர்தன் அப்படம் பெரிதாக ஓடவில்லை என கூறியுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது