சென்னையில் சென்ற டிசம்பர் 3ஆம் தேதி இரவு முதல் தாண்டவமாடத் தொடங்கிய மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை இன்று விடியற்காலை வரை இடைவிடாது கொட்டியது.

Continues below advertisement

கனமழை சூறைகாற்றுடன் இந்த மிக்ஜாம் புயல் அதன் கோர முகத்தைக் காட்டிச் சென்றுள்ள நிலையில், சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் உணவு, தண்ணீர், மின்வசதிகள் இல்லாமல் நேற்று முன் தினம் இரவு தொடங்கி தத்தளித்தனர். இந்நிலையில் புயல் நேற்றிரவு சென்னையைக் கடந்த நிலையில், அது முதலே மீட்புப் பணிகள் துரித கதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காரப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டை மழை நீர் சூழ்ந்ததாகவும், தான் செல்ஃபோன் சிக்னல், மின்சாரம், வைஃபை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை பதிவிட்டிருந்தார்.  மேலும் இதே வில்லாவில் பிரபல நடிகர் ஆமீர்கானும் தங்கியிருந்த நிலையில், மீட்புப் படையினர் விரைந்து சென்று இவர்களை படகு மூலம் மீட்டனர்.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து தனக்கு விரைந்து உதவி செய்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினருக்கு நன்றி  என விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தங்களை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

“எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார்,  எங்கள் வில்லா நண்பர்களுக்கும் எனக்கும் போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.