9 Years of Mundasupatti : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘முண்டாசுப்பட்டி’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


பொதுவாக சினிமாவில் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் நம் மனதுக்கு நெருக்கமாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாகவும் அமையும். இதில் இந்த இரண்டாவது ரகத்தில் அமைந்த சிறந்த படங்களில் ஒன்று தான் ‘முண்டாசுப்பட்டி’. ராம்குமார் இயக்கிய இந்த படத்தில் நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


கதையின் கரு 


கேமராவை பார்த்தாலே முண்டாசுப்பட்டி கிராமத்தினருக்கு பயம் தான். அதற்கு காரணம் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்கள் தான். புகைப்படம் எடுத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவது உறுதி என நம்புகிறார்கள். அப்படியான நிலையில், கிராமத்தின் தலைவர் இறந்துபோக போட்டோ எடுக்க விஷ்ணு விஷால் உதவியாளர் காளி வெங்கட்டுடன் வருகிறார். சூழ்நிலைகளால் அங்கு சில நாட்கள் தங்கும் விஷ்ணு விஷாலுக்கு நந்திதாவுடன் காதல் ஏற்படுகிறது. பின்னர் ஸ்டூடியோவில் ஊர் தலைவர் புகைப்படத்தை கழுவ கொண்டு சென்றால் படம் சரியாக விழுந்திருக்காது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு தந்திரம் செய்கிறான். விஷயம் கிராமத்தினருக்கு தெரியவர, விஷ்ணு விஷால் எப்படி தப்பித்தார்? காதலியை எப்படி கரம்பிடித்தார் என்பதை நகைச்சுவை ததும்ப ததும்ப காட்சிப்படுத்தியிருந்தார்கள். 




மாஸ் காட்டிய முனீஸ்காந்த் 


முண்டாசுப்பட்டி படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஸ்கோர் செய்ததோ என்னவோ முனீஸ்காந்த் தான். இதற்கு முன் பல படங்களில் அவர் தலையை காட்டி இருந்தாலும் முண்டாசுப்பட்டி முனீஸ்காந்தின் அடையாளமாக மாறியது. அதேபோல் இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் வந்தாலும் ஆனந்தராஜ் தூள் கிளப்பியிருப்பார். குறிப்பாக அந்த பூனை சூப் காமெடி எவர் க்ரீனாக அமைந்தது. 


இந்த படத்தில் இடம் பெற்ற காதல் கனவே, ராசா மகராசா பாடல்களும், பின்னணி இசையும் ஷான் ரோல்டனின் திறமையை பசைசாற்றியது. இயக்குநருக்கு ராம்குமாருக்கு இது முதல்படம் தான். இந்த படத்தின் வெற்றி விஷ்ணு விஷாலோடு ‘ராட்சசன்’ என்னும் தமிழ் சினிமாவின் ஆல்டைம் ஃபேவரைட் கிரைம் த்ரில்லர் படத்தில் இணைய காரணமாக அமைந்தது. தற்போது இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.