கடந்த வாரம் தமிழ்நாட்டை தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழை பொழிவால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் வெள்ள பாதிப்பால் அவதிப்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு ஏராளமான மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். இந்த வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். ஏராளமான தனிநபர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முன்னதாக நிதி வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இந்தத் தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் மூலம் நன்றி தெரிவித்து பகிர்ந்துள்ளார்.
'லால் சலாம்' ரிலீஸ் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் சிறப்பு க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட பாதிப்பு :
இந்த மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் நடிகர் விஷ்ணு விஷாலும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் இருக்கும் ஏரியாவை சுற்றிலும் மழைநீரானது முழுவதுமாக சூழ்ந்துள்ளது. மின்சாரம், வைஃபை, போன் சிக்னல் என எதுவும் இல்லை என்றும் வீட்டை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டு அந்த சமயத்தில் தனது வீட்டை சுற்றி இருக்கும் சூழ்நிலையை புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து இருந்தார். மேலும் அவருக்கும் அந்த குடியிருப்பை சுற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு உதவி செய்யுமாறும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ட்வீட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.