ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கிறிஸ்டினா கதிர்வேலன் இசை வெளியீடு
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
பிக்பாஸ்' பிரபலம் நடிகர் சிபி பேசுகையில் : ''இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
வெள்ளையாக இருப்பது என் தவறா
''இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய 'ட்ரேட்மார்க்' சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,'' என்றார்.