நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வெற்றியடைய வேண்டி நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “லியோ”. நடிகர் விஜய் இப்படத்தில் ஹீரோவாகவும், நடிகை த்ரிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும் அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (அக்டோபர் 19) உலகமெங்கும் வெளியாகிறது. 


தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. இதில் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான நிலையில் எதிர்ப்புகள் காரணமாக அந்த வார்த்தை ட்ரெய்லரில் மியூட் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக டிக்கெட் முன்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 






அக்டோபர் 24 ஆம் தேதி வரை 90 சதவிகித காட்சிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இதனிடையே நடிகை ஷாலினி லியோ படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். எனக்கு பிடிச்ச, என் உங்க எல்லோருக்கும் பிடிச்ச இளைய தளபதி விஜய் அவர்களோட லியோ படம் நாளைக்கு உலகமெங்கும் ரிலீசாகுது. இந்த படம் கண்டிப்பாக ஒரு விஷூவர் ட்ரீட் ஆக இருக்கப்போகுதுன்னு நான் நம்புறேன். உங்க எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு நான் நம்புறேன்.


கண்டிப்பாக நீங்க தியேட்டருக்கு போய் படம் பாருங்க. விஜய், த்ரிஷா மற்றும் படத்தில் நடித்துள்ள பிரபலங்கள், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும். உங்களைப் போல நானும் லியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காட்டி படக்குழுவினர் வாழ்த்து பெற்றிருந்தனர். இந்நிகழ்வில் நடிகர் விஷால், இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.