தன்னுடைய திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். 


விஷால் 


 நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , கெளதம் மேனன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஏப்ரம் 15 ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியான கையோடு ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளார் நடிகர் விஷால் . பல்வேறு நேர்காணல்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை அவர் பேசி வருகிறார். இத்துடன் துப்பறிவாளன் 2 ஆம் பாகம் குறித்து பேசியுள்ளார் விஷால் .


துப்பறிவாளன் 2 


மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன் . விஷால் , பிரசன்னா, அனு இமானுவேல் , வினய், ஆண்டிரியா  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்தார்கள். அங்கிலத்தில் வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் எடுக்கப் பட்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்க இருந்த நிலையில் விஷால் மற்றும் மிஸ்கின் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வேலைகள் தள்ளிப்போயின.


இவன் எல்லாம் படம் எடுத்து என்ன கிழிக்கப் போறான்






தற்போது துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பை வரும் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தான் இயக்குவது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் நடிகர் விஷால். “ இவன் எல்லாம் படம் எடுத்து என்ன கிழிக்கப் போறான் என்று எல்லாரும் நினைக்கலாம் . அனால் என்னை நிரூபித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு நல்ல படத்தை நான் ரசிகர்களுக்கு கொடுப்பேன். இது எல்லாவற்றுக்கும் நான் இயக்குநர் மிஸ்கினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் . அவரால்தான் இன்று நான் இயக்குநராகி இருக்கிறேன்" என்றார்.