கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் Pubic Policy Research Center என்ற அமைப்பு, ’லட்சியங்களை கைவிட்ட திமுக ஊழல் மற்றும் புறக்கணிப்பின் கதை’ என்ற ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இந்த அமைப்பின் தலைவர் சுமித் பஷின் அறிக்கையை வெளியிட்ட, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன், இந்த அமைப்பு டெல்லியில் உள்ள அமைப்பு. இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக அரசு எப்படி எல்லாம் அவர்களது புறக்கணிப்பாலும் அலட்சியத்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியை எவ்வாறு பாதித்துள்ளார்கள் என்று விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். விவசாயம் பிரதானமாக இருக்கக்கூடிய இங்கு எவ்வாறு விவசாயத்தை இந்த மாநில அரசு புறக்கணிக்கிறது. நீர்வள மேலாண்மையில் மத்திய அரசு  வழங்கியுள்ள இடங்களில் மாநில அரசு அந்தப் பணிகளை செய்யாமல் விட்டதால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவிற்கு வருகின்ற வருவாய் தான் அதிகமாக இருக்கிறது. பாரம்பரியத்திற்கு மதிப்பு கொடுக்காமல் கோவில்களை இடிப்பது கோவில்களுக்கு எதிராக பேசுவது சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறுவது என தமிழகத்தில் இந்து பாரம்பரியத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக இருந்தாலும் கூட மக்கள் வாக்களித்து அரசாங்கம் அமைகின்ற பொழுது அந்த அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய அரசாக இருக்க வேண்டும். இங்கே தொழில் துவங்க வேண்டும் என்றால் Business Friendly to the Government என்று இல்லாமல் Business Friendly To the First Family என்பதை திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இதன் காரணமாக இங்கு முதலீடு செய்து தொழில் துவங்க கூடிய நிறுவனங்கள் குறைந்துள்ளார்கள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி பிரச்சனை


ஜிஎஸ்டி பற்றி திமுக அரசு மற்றும் அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய கமலஹாசன் எல்லாம் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா அல்லது படத்தில் இடையில் வருகின்ற ஏதோ வசனம் என்று நினைத்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. ஜிஎஸ்டி இருப்பதால் வரி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி பாதிப்பு எந்த மாநிலத்தில் இருந்தாலும் அது முழுக்க முழுக்க மத்திய அரசை சாராது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருப்பார்கள் எனவும் தமிழகத்தில் ஜிஎஸ்டியில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறது என்றால் அதனை உரிய முறையில் தெரிவித்து, மாநில அரசின் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில தரப்பின் வாதத்தை முன்வைத்து அதற்கான தீர்வு கொடுக்காமல் புறக்கணித்து இருப்பது மாநில அரசு தான்.


கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்த பொழுது காவிரி நீர் பிரச்சனை இல்லை. தற்பொழுது காங்கிரஸ் வந்ததும் பிரச்சினை துவங்கி விட்டது. மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் இல்லை என்று நானே தெரிவித்துள்ளேன். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் கூறியதை தான் இந்த அறிக்கையும் கூறுகிறது. பாஜக எப்போதும் உண்மைதான் பேசும். மேலும் இந்த அறிக்கை தேர்தலுக்காக வெளியிடப்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே இந்த அறிக்கை தயாராகிவிட்டது” என தெரிவித்தார்.