நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலில் எண்ட்ரி தருவதாக செய்திகள் வெளியான நிலையில், “இயற்கை என்னை அழைத்தால் மக்களுக்காக குர கொடுக்கத் தயங்க மாட்டேன்” என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசியதாவது:
‘2026ல் நிறைய பேர் இருப்பாங்க’
“நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆவேன்னு நினைச்சதே இல்லை. நான் ஒரு நடிகன்னா 2004 இல் இருந்து நடிகனா செயல்பட்டுட்டு இருக்கேன். ராதாரவிய எதிர்த்து நிப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. தயாரிப்பாளர் சங்கம்ல நிப்பேன்னும் நினைக்கல. எல்லாமே அந்தக் காலக்கட்டத்துல எடுக்கக்க்கூடிய முடிவு. முன்னாடி ஒரு திரையரங்கில் ஒரு படம் ஓடும், இப்பலாம் மல்ட்டிப்ளெக்ஸில் 6 படம் ஓடுகிறது. அதுபோல 2026இல் மக்கள் பிரதிநிதிகள் நிறைய பேர் இருப்பார்கள்னு நான் நம்பறேன்” என்றார்.
‘விஜய்க்கு ரசிகனா வாழ்த்துகள்’
நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஷால், “வாழ்த்துகள், நான் அவர மனசார வாழ்த்தறேன். இந்த இடத்துல இதை ஒரு பொழுதுபோக்கா பாக்காம, மக்களுக்கு நல்லது செய்யணும் அப்படிங்கற எண்ணத்துல வந்திருந்தா வாழ்த்துகள். இது ஆரோக்கியமான விஷயம். அதிகாரப்பூர்வமா இத அறிவிக்கறது நல்ல விஷயம். 2026இல் அவரும் வரப்போறாரு. இத்தனை ஆண்டுகால வாழ்க்கைல அவர் நிறைய கண்டிப்பா கடந்து வந்திருப்பாரு. ஒரு ரசிகனா, தமிழ்நாட்டு குடிமகனா அவர வாழ்த்தறேன்” என்றார்.
விஜய்யுடன் நீங்கள் இணைந்து பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு, “மக்கள் தேவையை பூர்த்தி செய்ய இத்தனை கட்சிகள் தேவையில்லை. இப்பவே கூட்டணி என்று பேச வேண்டியதில்லை. இங்கு ஏற்கெனவே நிறைய கட்சிகள் உள்ளன” என்றார். தொடர்ந்து “நடிகர் சங்கத்தில் சீனியர்களை எதிர்த்து புதிய அணியை உருவாக்கியது போல், அரசியலிலும் செய்வீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், “நான் இப்போது அது பற்றி சொல்ல முடியாது. நேரம் வரும்போது அது பற்றி கூறுகிறேன்” என்றார்.
2024 தேர்தல் வெற்றி
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அப்படி இந்த முறையும் ஓட்டுபோட்ட பிறகு சொல்றேன்.
விஷால் நற்பணி இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள், இருப்பவர்களிடமிருந்து வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பாலமாக நாங்கள் இருக்கிறோம். அரசியல் என்பது பிற துறை போல பொழுதுபோக்குக்கு வந்து செல்லும் இடம் கிடையாது. தண்ணீர் வசதி இல்லாத பல கிராமங்கள் இன்றும் உள்ளன. 2 வருஷம் கழித்து தண்ணீர் வசதி இல்லாத இடத்துக்குச் சென்று படப்பிடிப்பு செய்தால் அது எனக்கு தர்மசங்கடம். அதைப் பூர்த்தி செய்ய தான் இப்படி இயங்குகிறோம்” என்று விஷால் பேசியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஷால் சமீப காலமாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக ட்வீட் செய்து வரும் நிலையில், அவர் பாஜக மற்றும் மோடியின் வெற்றியைக் குறிப்பிட்டு தான் பேசியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.