நடிகர் விஷால், தான் எப்படி பாடகராக அறிமுகமான பின்னணி குறித்து நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமாக பேசியுள்ளார். 


நடிகர் மற்றும் இயக்குநரான அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விஷால். இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சண்டகோழி,தாமிரபரணி,தீராத விளையாட்டு பிள்ளை, மலைக்கோட்டை, திமிரு,வீரமே வாகை சூடும், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவடைந்ததை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினார். 


இதனிடையே 2012 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படம் வெளியாவதாக இருந்தது. ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், நிதி நெருக்கடியால் அந்த படம் இன்று வரை வெளியாகவில்லை. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருந்தது. 


அதேசமயம் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் அடுத்தடுத்த வளர்ச்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஷால் இந்த படத்தில் பாடகராக அறிமுகம் ஆகியிருந்தார். ‘மை டியர் லவ்வரு’ என தொடங்கும் அந்த காதல் பாடலை மிகவும் வேடிக்கையாக விஷால் பாடியிருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் இந்த பாடலை பாட மிகப்பெரிய காரணம் இருந்ததை நேர்காணல் ஒன்றில் விஷால் தெரிவித்துள்ளார். 



அதில்,’நான் பாடல் பாடியதால் தான் அந்த படமே ரிலீசாகவில்லை. அந்த பாட்டு உருவாக ஒரு தனி கதையே உள்ளது. அதாவது ஸ்டூடியோவுக்குள் விஜய் ஆண்டனியிடம், சுந்தர்.சி சென்று, ‘இந்த மாதிரி 2 ஹீரோயின்கள் கூட ஹீரோ ஆடுற மாதிரி ஒரு பாட்டு இருக்குது. இந்த பாடல் வித்தியாசமா இருக்கணும். இதை பாடுறவன் இனிமேல் வாழ்க்கையில பாடவே கூடாது என்ற மாதிரி இருக்கணும் என பேசிட்டு இருக்கும்போதே நான் கதவை திறந்து விட்டு அந்த ரூமுக்குள் வந்தேன். அங்க என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. 


இவன் தான் பாடப்போறான்னு விஜய் ஆண்டனி சொன்னார். நான் சூப்பர் சான்ஸ்டா என பெருமையா நினைச்சேன். ஆனால் அங்க என்ன நடந்துச்சுன்னு சொன்னாங்க. அப்படித்தான் அந்த மை டியர் லவ்வரு பாடல் உருவானது” என விஷால் கூறியுள்ளார்.