வில்லேஜ் டிக்கெட் 2023 எனும் மாபெரும் கிராமத் திருவிழாவை தொடங்கி வைத்த நடிகர் விஷால் தனது திரைப்படங்களில் இருந்து விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 


வில்லேஜ் டிக்கெட் திருவிழா:


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சென்னையின் புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்று சத்தியபாமா பல்கலைகழகம். இங்கு 4 வது முறையாக மிகப்பெரிய கிராமத் திருவிழாவான வில்லேஜ் டிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  




தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் கலாச்சாரத்தையும் பல்வேறு கலை வடிவங்களையும், தனித்துவமான உணவுத்தயாரிப்பு முறைகளையும், உணவுகளையும் மற்றும் உணர்வுகளையும் உயிரோட்டத்துடன் கண்முன் நிறுத்தும்.  


தொடங்கி வைத்த நடிகர் விஷால்:


தமிழ்நாட்டின் கிராமங்களில் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு வரும் ஆரோக்கியமான உணவு கலாச்சாரம், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளையாடப்பட்ட, தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுகள், பழங்கால கிராமப்புற வீடுகள், பெட்டி – கடை, பஞ்சாயத்து அமைப்பு முறை, மைய மேடை மற்றும் வியப்பூட்டும் அற்புதமான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமப்புற வாழ்க்கையோடு இணைந்திருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் நகர்ப்புற மக்களுக்கு நினைவூட்டி, அறிமுகப்படுத்தி அதற்கு புத்துயிர் அளிப்பதே வில்லேஜ் டிக்கெட் நிகழ்வின் நோக்கமாக திகழ்கிறது.


தமிழ்நாட்டின் கிராமங்களின் வாழ்க்கை, கலை மற்றும் கலாச்சாரத்தை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவித்து உணரவும், ரசித்து மகிழவும் ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பை வில்லேஜ் டிக்கெட் வழங்குகிறது.  இந்த நிகழ்ச்சியை திரைப்பட நடிகர் விஷால் தொடங்கி வைத்தார்.


ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ரூபாய்:




நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் மாட்டுவண்டி பயணம், நாற்று நடுதல் உள்ளிட்டவற்றை உற்சாகத்துடன் செய்தார். பின்னர் மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தி உரையாற்றிய அவர், "விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை நகர மக்கள் உணரும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நிகழ்வை எடுத்து செல்ல வேண்டும். என்னுடைய திரைப்படங்களுக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கப்போகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.


வில்லேஜ் டிக்கெட் நிகழ்வு இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்டபோது கிடைத்த அற்புதமான வரவேற்பு தங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றும், மீண்டும் சென்னை மக்களுக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் பெருமை கொள்வதாகவும் பிராண்ட் அவதாரின் தலைமை செயல் அலுவலர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சரியான நபர் விஷால் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த நபர்களும் அனுபவிப்பதற்கும், மகிழ்வதற்கும் இந்நிகழ்வின் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறினார். 


கிராமிய விழா:


இந்த மாபெரும் கிராமிய விழாவில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், ஃப்ரீஸ்டைல் நடனம், மிமிக்ரி நிகழ்ச்சி மற்றும் கலாச்சார பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்று கண்களுக்கு விருந்தளித்தனர். தலை வாழை இலையில் 32 வகை அசைவ உணவுகளும், கலியாண விருந்தில் பரிமாறப்படும் 32 வகை சைவ உணவும் தமிழ்நாட்டின் தலைசிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட உள்ளன. காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆனால் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.