தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து, மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கபட்டு அதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில், நடிகர் சங்கத் தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷாலும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், தென்னிந்திய நடிகர் சங்க வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வரலாற்றில் என்றுமே 'நேர்மையும் உழைப்பும் தோற்பதில்லை' என்று கூறுகிறது. நான் உட்பட "பாண்டவர் அணி" முழு அணியையும் 'பொதுச் செயலாளராக' தேர்வு செய்த தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் (SIAA) நடிகர்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு நீண்ட இழுபறி போர் ஆனால் இறுதியாக உண்மையே வெற்றி பெற்றது. நான் எப்போதும் நீதியை நம்புகிறேன், நியாயமான தேர்தலை நடத்திய நீதித்துறை அமைப்புக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதிக பொறுப்புகள் இருக்கிறது. அதை நேர்மை மற்றும் அதிக உழைப்பின் மூலம் ஒவ்வொன்றையும் ஒரே மாதிரியாக நிறைவேற்றுவோம். தேர்தல் பணியை சுமூகமாக நடத்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், ஊடகத்துறையினர், காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.
எனது பாண்டவர் அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நமது நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்கவும், அதை முடிக்கவும் எங்கள் கனவை என்றென்றும் நிறைவேற்றவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்