மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷால் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் நடிப்பில் கடைசியாக எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்களும், விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ரமணா புரொடக்ஷன்ஸ் பேனரில் லத்தி என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் முதல் பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு 2 முறை அடிபட்டது.
இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விஷாலுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இதனிடையே த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மார்க் ஆண்டனி படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஒருபகுதியாக கல்குவாரியில் நடைபெற்ற சண்டை காட்சியில் விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்