இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
மாரிமுத்து
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மாரிமுத்துவை கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
நடிகர் விஷால் இறங்கல்
மாரிமுத்துவின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது. என் சக நடிகரும் நல்ல மனிதரும் இயக்குனருமான மாரிமுத்து சார் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறேன். அவர் இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அவருடைய குடும்பத்திற்கு பலத்தையும் ஆதரவையும் தர வேண்டும் என்பதே இன்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர் இவருக்கு கொடுத்த அடையாளம்:
இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது. இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி, வாய் நிறைய இவரின் ‘இந்தா மா ஏய்’ என்ற வார்த்தையை ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, அதிக ரசிகர்களையும் இவர் பக்கம் கொண்டு வந்தது. ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த அளவிற்கு மக்கள் ரசிப்பதற்கு மாரிமுத்துவின் அசாத்திய நடிப்பு திறமைதான் காரணம். சோஷியல் மீடியாக்களில் இவரின் ஏராளமான தக் லைப் ,மீம்களையும் சேர் செய்து நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது இவரின் சோக செய்தியையும் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றன.
மேலும் படிக்க : Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!