Rathnam Movie Vishal : ரத்னம் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ரத்னம் படம் 


இயக்குநர் ஹரியுடன் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பின் 3வது முறையாக விஷால் இணைந்துள்ள படம் “ரத்னம்”. பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, யோகிபாபு என பலரும் இப்படத்தில் நடித்திருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரத்னம் படம் ஏப்ரல் 26 ஆம் தேதியான இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஒவ்வொரு இடங்களாக சென்று நேரடியாக ப்ரோமோஷனில் ஈடுபட்டனர்.


விஷால் புகார்


இப்படியான நிலையில் நடிகர் விஷால் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரத்னம் படத்தின் முன்பதிவுகளை இன்னும் தொடங்காமல் வைத்திருக்கிறார்கள். திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளை 6 மணி நேரமாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். என்னை சுற்றலில் விடுகிறார்கள். ரத்னம் படம் வெளியாக இருக்கும் கடைசி நேரத்தில் எனக்கு சம்பந்தம் இல்லாத நபர் நான் பணம் தேர வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதன் அடிப்படையில் இப்படியான சம்பவங்கள் நடக்கிறது’ என ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம் 


இந்நிலையில் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “கடைசியாக கட்ட பஞ்சாயத்து வளர்ந்து எந்த பயமும் வருத்தமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த ஆண்டு தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் ரோலர்கோஸ்டர் சவாரியில் உள்ளனர் என்பது தான். திருச்சி, தஞ்சாவூர் நகரங்களின் தியேட்டர் சங்கத்தின் உறுப்பினர்கள் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடப்பதை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். என்னை போன்ற போராளிக்கு இது பின்னடைவு தான் என்றபோதும் சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன்.


காரணம் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வாழ்வாதாரம் உள்ளது என்பதால் திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக எடுப்பவை அல்ல என்று நம்புபவன் நான். 


இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன பயன் அல்லது காரணத்துக்காக இந்த தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது என்ற காரணம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். நிச்சயம் இது உங்கள் அனைவருக்கும் அவமானம். இதை நடிகர் சங்க பொதுச்செயலாளராகவோ, நடிகராகவோ, தயாரிப்பாளராகவோ சொல்லவில்லை. ஒரு வியாழக்கிழமை மாலையில் தன்னுடைய படைப்பை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க நடந்த சம்பவங்களை பார்த்த ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.