நடிகர் விஜய்யுடன் அரசியலில் இணைந்து பயணிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக, ‘மார்க் ஆண்டனி’ என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இப்படம் போன் வழியாக காலத்தை கடத்தும் டைம் டிராவல் நிகழ்வுகள் கொண்ட கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
தாடியும், கையில் துப்பாக்கியுமாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இப்படத்தில் வித்தியாசமாக தோன்றியுள்ளனர். டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. இதனிடையே கல்லூரி விழா ஒன்றில் ‘மார்க் ஆண்டனி’ படக்குழுவினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது மாணவ, மாணவிகள் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பினர்.
அப்போது மாணவி ஒருவர் விஷாலிடம், “நீங்கள் நடிகர் விஜய் அவர்களின் தீவிர ஃபேன். அவரின் லியோ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியது. ஆனால் மிஸ் ஆகி விட்டது. விஜய் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டார். நீங்கள் முன்னால் இருந்தே இருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் படத்தில் தான் ஒன்றாக பார்க்க முடியவில்லை.அரசியலில் ஒன்றாக பார்க்கலாமா?’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு விஷால், “நாங்கள் இருவரும் அரசியலில் ஒன்றிணைவது என்பது கடவுள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஏற்கனவே இங்க எல்லாரும் அரசியல்வாதி தான். உங்களை அறியாமலயே உதவி பண்ணிருப்பீங்க. என்னை பொறுத்தவரை அரசியல் என்பது சமூக சேவை செய்வது. அப்படி பார்த்தால் நீங்களும் அரசியல்வாதி தான்” என தெரிவித்துள்ளார்.
அரசியலில் விஷால்
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷால் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே நடிகர் சங்க தேர்தலில் பங்கேற்று விஷால் கூட்டணி 2 முறை வெற்றி பெற்றது. இதன்மூலம் விஷாலுக்கு அரசியல் ஆசை இருப்பதாக சொல்லப்பட்டது. இதனை நிரூபிக்கும் வண்ணம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மூலம் பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஷால் விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.