மார்க் ஆண்டனி படத்தை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. போன் மூலம் டைம் டிராவல் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாக வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஷாலே அறிவித்தார். மேலும் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.1-ஐ விவசாயிகளுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் பிரபலமான பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தது தொடங்கி  மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்தது வரை என பல சிறப்பான விஷயங்களை ஆதிக் ரவிச்சந்திரன் கையாண்டிருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து மார்க் ஆண்டனி படம் பார்க்க தியேட்டருக்கு வருகை தருகின்றனர். 


இந்த நிலையில் நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'மார்க் ஆண்டனி' படத்தை பார்க்க  மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம்  கேட்டனர். மேலும் சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் பணம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. தான் மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தேன், அதன் பிறகே  'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார். 






அதேசமயம்  பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகாராஷ்ட்ரா முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். மேலும் இதை செய்வது எனக்காக அல்லாமல் எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக செய்கிறேன். நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க: Mark Antony: ‘இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்’ .. மார்க் ஆண்டனி படம் வெற்றி குறித்து வீடியோ வெளியிட்ட விஷால்..!