தன்னுடைய சினிமா வாழ்க்கைகுறித்து நடிகர் விமல் பேசிய நேர்காணல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கு வரும்போதெல்லாம் போஸ்டர் பார்த்துகிட்டே தான் வருவேன். அப்பவே எனக்கு சினிமா ஆசை வந்திடுச்சு. அப்பாவிடம் அந்த ஆசையைச் சொன்னேன். அப்பா மெட்ரோ வாட்டர் ஒப்பந்ததாரர். எனக்கு அப்பா முதலில் ஒரு வருஷம் டைம் தருகிறேன் என்றார். ஆனால் எனக்கு 7 வருடங்கள் ஆனது வாய்ப்பு கிடைக்க. என் பிடிவாதத்தைப் பார்த்து அப்பா விட்டுவிட்டார். எனக்கு சினிமாவில் தெரிந்ததே வைரமுத்து சார் பிஏ பாஸ்கரன் சார் மட்டும் தான். அவர் எங்க வீட்டுப் பக்கத்தில் இருந்தார். அவர் மூலமாக எஸ்.ஜே.சூர்யா சாரை பார்த்தேன். ஃபோட்டோ, நம்பர் எல்லாம் கொடுத்துவிட்டு வந்தேன். சினிமாவில் நடிக்க ஏதாவது தெரிய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். அப்புறம் முறையாக நடிப்பு கத்துக்கிட்டேன். அப்புறம் நிறைய பேர் பழக்கம் ஏற்பட்டது. அங்கு தான் கூத்துப்பட்டறை பற்றி கேள்விப்பட்டேன். பசுபதி சார் கூத்துப்பட்டறை பிராடக்ட் என்பதை அங்குதான் அறிந்தேன்.
2002ல் நான் கூத்துப்பட்டறையில் ஜாயின் பண்ணேன். அங்குதான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கு வந்த வாய்ப்பெல்லாம் பெரிதாக நடிப்புத் திறமையைக் காட்டும் படம் வரவில்லை. பசங்க, கலகலப்பு, தேசிங்குராஜன் என்ற படங்கள் தான் எனக்குப் பொருந்தும் என்று நினைக்கிறார்கள். வாகை சூடவா கொஞ்சம் வித்தியாசமான படம் செய்தேன். எனக்கு கொஞ்சம் சீரியஸான படம் நிறைய பண்ண வேண்டும் என்று ஆசை. நான் சினிமா வாய்ப்பு தேடும் இடத்தில் தான் சூரியை சந்தித்தேன். நான், விஜய் சேதுபதி, சூரி எல்லோரும் வாய்ப்பு தேடும் ஃப்ரெண்ட்ஸ். பசங்க படத்திற்கு விஜய் சேதுபதிதான் என்னை ரெஃபர் பண்ணார். அவர் சொல்லித்தான் பாண்டிராஜ் சாரைப் பார்த்தேன். ஆனால் அவர் பார்த்தவுடன் வேலைக்கு ஆகாது என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் நான் க்ளீர் ஷேவில் சென்றிருந்தேன்.
அப்புறம் நான் நடித்த பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தைப் பார்த்துட்டு பாண்டிராஜ் சார் கூப்பிட்டர். முதலில் கேமரா மேன் பிரேம்குமாரிடம் அந்த விளம்பரத்தைக் காட்டினார். உடனே பிரேம் அதை பாண்டிராஜிடம் காட்டினார். அப்புறம் எல்லாம் கிளிக் ஆனது. நான் வாங்கிய முதல் அட்வான்ஸ் ரூ.10 ஆயிரம். எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல். நீதான் ஹீரோ என்றார்கள். எனக்கு தலையே சுற்றிவிட்டது. சசிகுமார் சார் தான் அதைப் பண்ண வேண்டியது. அவர் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. சினிமா என்றால் என்னவென்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை திரைத்துறைக்கு வரவேற்றது பசங்க திரைப்படம்.
ஓவியாவுக்கு அண்ணன்:
பசங்க படத்திற்கு முன்னாடியே களவாணி திரைப்படம் கதை எனக்கு சொல்லியிருந்தார்கள். முதலில் எனக்கு அந்தப் படத்தில் அண்ணன் கேரக்டர் தான் சொன்னார்கள். சற்குணம் சார் என்னை அண்ணன் கேரக்டருக்கு தான் தேர்வு செய்தார். பசங்க படம் ஹிட் ஆனதும், தயாரிப்பாளர் நசீரிடம் பேசி சற்குணம் சார் எனக்கு ஹீரோ வாய்ப்பை கொடுத்தார். ஓவியாவுக்கு அண்ணனா நடிச்சிருக்க வேண்டியது. பசங்க வாய்ப்பு வந்ததால் களவாணியில் ஹீரோவாக நடித்தேன்.