நடிகர் விமல் நடித்து இன்று வெளியாவதாக இருந்த குலசாமி படம் வெளியாகாததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் துணை வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் நடிகராக அறிமுகமாகியிருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படம் அவருக்கான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மன்னர் வகையறா, கன்னி ராசி என பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களால் அன்பாக கேலக்ஸி ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
இப்படியான நிலையில் நடிகர் விமல் நடிப்பில் உருவான படம் “குலசாமி”. இந்த படத்தை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவரும், தண்டாயுதபாணி, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரவண சக்தி இயக்கியுள்ளார். குலசாமி படத்தில் ஹீரோயினாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி ஷங்கர்,கர்ணராஜா, முத்துப்பாண்டி, ஜெயசூர்யாஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
குலசாமி படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராகவும், மக்களிடம் பிரபலமான ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் நடிகராகவும் அறிமுகமாகின்றனர். இதனைத் தவிர்த்து படத்தின் வசனங்களை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குலசாமி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் விமல் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ள குலசாமி படம் இன்று தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இப்படத்திற்கு முன்பதிவும் சில தியேட்டர்களில் தொடங்கிய நிலையில், படம் ரிலீசாகவில்லை. இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், குலசாமி படத்தை தியேட்டரில் வெளியிட உகந்த சூழல் இல்லாத காரணத்தால் படமானது மே 5 ஆம் தேதி ரிலீசாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விமல் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
அதேசமயம் விமல் நடிப்பில் இன்றைய தினம் தெய்வ மச்சான் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததே குலசாமி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: குலசாமி இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா... கலந்துகொள்ளாத விமல்... வருத்தம் தெரிவித்த இயக்குநர் அமீர்!