காசோலை மோசடி வழக்கில் பிரபல நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விமல் மீது அடுக்கடுக்காக புகார்


கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல், நடிகை கயல் ஆனந்தி, பிரபு, ரோபோ ஷங்கர், சரண்யா, பிக்பாஸ் ஜூலி ஆகியோர் நடித்து வெளியான படம் “மன்னர் வகையறா”. இந்த படத்தை நடிகர் விமல் தயாரித்திருந்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மன்னர் வகையறா படத்திற்காக தன்னிடம் ரூ.5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கோபி புகார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சினிமா விநியோகஸ்தர் சிங்கார வேலனும் புகார் அளித்தார். 


இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளராக முதலில் கணேசன் என்பவர் இருந்துள்ளார். அவரை மூளைச்சலவை செய்து இந்த படத்தை விமல் ஆரம்பித்ததாகவும், முதலில் 1.5 கோடி முதலீடு செய்ய சொல்லியதாகவும் கணேசனின் மகள் ஹேமா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் 17 நாட்கள் புதுக்கோட்டையில் படப்பிடிப்பு நடந்த நிலையில், நடுவில் படப்பிடிப்பு நடக்காமல் இருந்துள்ளது. 


இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இடையில் படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என விமல் கூறியுள்ளார். இதுவரை செலவு செய்த தொகையையும் திரும்ப தந்துவிடுவதாக கூறியுள்ளார்.  இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் கணேசன் வழக்கு தொடர்ந்தார். இதில் சமரசம் செய்து பணத்தை திரும்ப தருவதாக விமல் கூறினார். ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


காசோலை மோசடி புகார்


இதற்கிடையில் கோபியிடம் வாங்கிய பணத்திற்காக விமல் காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அது விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சியடைந்த கோபி அவர் மீது ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விமல் நீண்டகாலமாக அஜராகாமல் இருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தின் கெடுபுடியால் விமல் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது. 


இதற்கிடையில் மனுதாரர் கோபியை குறுக்கு விசாரணைச் செய்யக்கோரி, நீதிமன்றம் உத்தரவிட்டும் செய்யாமல் விமல் தரப்பு வழக்கை இழுத்தடித்து வந்தது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்து உத்தரவிட்டதோடு வழக்கை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.


மேலும் படிக்க: குலசாமி இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா... கலந்துகொள்ளாத விமல்... வருத்தம் தெரிவித்த இயக்குநர் அமீர்!