தனக்கு வாய்ப்பு கொடுக்கு ஒவ்வொரு இயக்குநரும் தனது படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று நிபந்தனை வைப்பார்கள் என்று நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.


விக்ராந்த்


தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் விக்ராந்த் . குறிப்பாக நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினராக இருப்பதால் தொடக்க காலத்தில் இவர் மீது பெரிய கவனம் குவிந்தது.  கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன், பாண்டிய நாடு, தாக்க தாக்க, கெத்து, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் விக்ராந்துக்கு பெரிய அளவிலான வெற்றிப் படங்கள் அமையவில்லை. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். விஷ்ணு விஷால்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால் சலாம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட நடிகர் விக்ராந்த் தனது சினிமா பயணத்தைப் பற்றி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்போது நடிகர் விஜய்யால் தான் நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் தான் நிறைய வாய்ப்புகளை இழந்தேன் 






 “எனக்கு வாய்ப்பு கொடுக்க வரும் ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒவ்வொரு நிபந்தைகள் விதிப்பார்கள் . குறிப்பாக விஜய்யை படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைக்க வேண்டும், பாடலுக்கு நடனமாட வேண்டும், ஆடியோ லாஞ்சுக்கு வரவேண்டும், குறைந்த பட்சம் படத்தைப் பற்றி ஒரு ட்வீட் ஆவது விஜய் பதிவிட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார்கள்.


இவ்வாறு நிபந்தைகள் வைக்கும் தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் ஒரு நொடிகூட யோசிக்காமல் நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். விஜய் தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். இதற்கு மேலும் அவரிடம் எந்த விதமான உதவி கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை“ என்று அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தனக்கு மகிழ்ச்சிதான் என்று நடிகர் விக்ராந்த் தெரிவித்தார்.