தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது தனித்துவமான அபாரமான நடிப்பால் தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர் எந்த 4 தமிழ் படங்களை இந்தி ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்? என்று கூறுவீர்கள் என்று கேட்பார்.
விக்ரம் சொன்ன 4 படங்கள்:
அதற்கு பதிலளித்த விக்ரம், “ மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன். இந்த படம் காட்பாதர் படத்தைப் போன்றது. இது ஒரு சுயசரிதை போல இருக்கும். இந்த படம் நடிக்கும்போது கமல்ஹாசனுக்கு 34 அல்லது 35 வயதுதான் இருக்கும். ஆனால், அவர் 62 வயது நபராக நடித்திருப்பார்.
16 வயதினிலே திரைப்படம். இது முழுக்க முழுக்க கிராமத்து படம். கிராமத்து வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டிய திரைப்படம். ஸ்ரீதேவி, கமல் நடித்திருப்பார்கள். வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருப்பார். எனக்கு என்னுடைய வசனங்கள் கூட நினைவில் இருக்காது. ஆனால், அந்த படத்தின் வசனங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.
ரஜினிகாந்த் அந்த படத்தில் தான் எதிர்கால சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்திருப்பார். அற்புதமான படம். ரீமேக் செய்ய வேண்டும் என்றால் அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றே சொல்ல வேண்டும். அதேபோல, நான் நடித்த ராவணன் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். இது மிகவும் சுவாரஸ்யமான படம். உதிரிப்பூக்கள் படத்தையும் கூறுவேன்.”
இவ்வாறு அவர் பேசியிருப்பார்.
ப்ளாக்பஸ்டர் படங்கள்:
விக்ரம் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களும் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள் ஆகும். மணிரத்னத்தின் புகழையும், தமிழ் சினிமாவின் புகழையும், கமல்ஹாசன் திரை வாழ்வையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படத்தில் நாயகன் தவிர்க்க முடியாதது. 16 வயதினிலே திரைப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய 3 பேரின் நடிப்பால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் இன்றளவும் இயக்குனர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.