பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் ஜெயராம் பேசியது பெரிய வைரல் ஆனது. அதிகாலை படப்பிடிப்பு நடக்கும் போது, உணவு கிடைக்காது என்பதால், நடிகர் பிரபு தனக்கு அதிகாலை 4:30 மணிக்கு உணவு பொட்டலம் தர முன்வந்ததும், அவரை பொய் சொல்லி, காலையில் ப்ரேக் இருப்பதாக நம்ப வைத்து படப்பிடிப்புக்கு அழைத்து வந்ததையும், அதன் பின் ப்ரேக் இல்லாமல், மதியம் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்ததால், பிரபு தன் மீது கோபமானார் என்று நகைச்சுவையோடு ஜெய்ராம் கூறியிருந்தார்.
உண்மையில் அந்த படப்பிடிப்பில், பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடித்திருந்தார். அப்படியிருக்கும் போது, தனது மகனுக்கும் பிரபு உணவு பற்றி விபரங்களை கூறியிருந்தாரா என்பது குறித்து, கேள்வி எழுந்தது. அதற்கு இணையதள பேட்டி ஒன்றில் விடையளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதோ அந்த பேட்டி...
‛‛அப்பா என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். மணி சாரோடு நீ இறங்கிட்டீனே... நீயா உனக்கு என்ன வேணுமோ அதை சாப்பிட்டுக்கோ என்று. மணி சார், பணியில் இறங்கிவிட்டார் என்றால், அவரே அவரைப் பற்றி மறந்து பணியில் போய் கொண்டே இருப்பார். யாராவது ஏதாவது கட்டாயப்படுத்தி கொடுக்க முயற்சிப்பார்கள் தான். ஆனால், நாம் குதிரையோடு அங்கும், இங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் போது யாரும் நம்மிடம் வரமாட்டார்கள். வரவும் முடியாது.
அதனால் சாப்பிட்டு போவது நல்லது. இதனால், காலையில் ட்ரை ஃபுட்ஸ் , ப்ரட் ஆம்லேட் மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன், காலையில் ஹெவியான உணவுகளை எடுக்க முடியாது. அதனால் எதையாவது சாப்பிட்டு செல்வோம். தெரியும், காலையில் ஷூட் ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், 10 அல்லது 10 அரை வரை ப்ரேக் வராது. வந்தாலும், 10 அல்லது 15 நிமிடம் தான் ப்ரேக் வரும்.
அதிலும் போர் காட்சிகளின் போதெல்லாம் ரொம்ப கஷ்டம். போர் காட்சிகளில் எங்கே ஷாட் வெச்சாலும், நாம இருப்போம். இடது அல்லது, வலது, பின்னால் அல்லது முன்னாள் என யாரோடவாது நாம் இருக்க வேண்டும்; அல்லது நாமே நடித்துக் கொண்டிருப்போம். அப்படி இருக்கும் போது ப்ரேக் எடுக்க வாய்ப்பே இருக்காது. எல்லா நேரத்திலும் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்போது சாப்பாடு பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது.ஜெயராம் சார் அங்கு இருக்கும் போது நடந்தது தான், பொட்டலம் மேட்டர். அது உண்மை தான்.
விக்ரம் சார், அவருக்கு கொடுத்த கதாபாத்திரம், ஒன் லைன் தான். அவர் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். நான் அப்படியே இருக்கமாட்டேன். தேர்வுக்கு கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் எல்லாம் இடத்திலேயும் இருக்கும். எப்போதுமே 200 அல்லது 300 பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். விக்ரம் சார் இந்த துறையில் இத்தனை ஆண்டுகள் இருக்கிறார். அவர் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார். மணிசாரும் அப்படி தான். இவர்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்’’
என்று அந்த பேட்டியில் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.