சியான் விக்ரம் 


விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அமோக வரவேற்பைப் பெற்றது. அடுத்தபடியாக எஸ்.யு அருண்குமார் இயக்கியுள்ள வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. தற்போது விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மண்டேலா , மாவீரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்துள்ளார் விக்ரம். இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் 


யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் யோகி பாபுக்கு பெரிய வெற்றிப்படம் ஏதும் அமையவில்லை . கோலமாவு கோகிலா படத்திற்குப்பின்  மண்டேலா திரைப்படம் அவருக்கு பெரிய கமர்சியல் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கி தன்னால் ஸ்டார்களையும் இயக்க முடியும் என நிரூபித்தார் மடோன் அஸ்வின். தீவிர அரசியல் கதைக்களத்தை காமெடியாக சொல்வது மடோன் அஸ்வினின் பெரிய பலம் என்று சொல்லலாம். குறிப்பாக மாவீரன் திரைப்பட சூப்பர்ஹீரோ ஜானரில்  தமிழில் இதுவரை வெளிவராத கான்செப்ட். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் பலரால் பாராட்டப்பட்டது. 






அதேபோல் மறுபக்கம் தனது ஒட்டுமொத்த திரை வாழ்க்கையிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக அர்பணித்தவர் விக்ரம். சில படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் விக்ரமின் உழைப்பு எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரியாகதான் இருந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விக்ரம் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் இப்புதிய படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த இருவரின் கூட்டணியில் ரசிகர்கள் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஷாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.