பிரான்ஸில் கென்ஸ் திரைப்பட திருவிழா கடந்த மே 16ம் தேதி தொடங்கி வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 3 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. அதன்படி, மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் ‘கென்னடி’ படமும், ஃபோர்ட்நைட் பிரிவில் ‘ஆக்ரா’ படமும், பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவில் ‘இஷானோ’ படமும் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியில் உருவாகியுள்ள ராகுல் பட், சன்னி லியோன், மேகா பர்மன், அபிலாஷ் தப்லியாள், மோஹித் தல்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கென்னடி”. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். 


விக்ரம்தான் முதல் தேர்வு:


இந்த படம் தொடர்பாக ஃபிலிம் கம்பானியன் பத்திரிகைக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியில், “கென்னடி திரைப்படத்திற்கு எனது முதல் தேர்வு ராகுல் அல்ல, நான் இந்த படத்தை எழுதும்போது ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்து எழுதினேன். அதனால்தான் இந்த படத்திற்கு ’கென்னடி’ என்று பெயர் சூட்டப்பட்டது. 


அந்த நடிகரின் உண்மையான பெயர் கென்னடி. அதனால் அந்த படத்திற்கு கென்னடி ப்ராஜெக்ட் என்று பெயர். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை சியான் விக்ரம்தான். விக்ரமை மனதில் வைத்து தான் இதற்கு கதை எழுதினேன். நான் அவரைத் தொடர்பு கொண்டு படத்தில் நடிப்பது பற்றி கேட்டேன். ஆனால் விக்ரம் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. பின்னர் தான் நான் ராகுல் பட்டிடம் கதை சொன்னேன். அவர் எட்டு மாதங்களை கென்னடி படத்திற்காக மெனக்கெட்டு நடித்தார்” என்றார். 






விக்ரம் பதில்:


இந்தநிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த பேட்டிக்கு நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் மூலம் விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், “அன்புள்ள அனுராக் காஷ்யப்... கென்னடி படத்துக்காக நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் நீங்கள் சொன்னதை வேறொரு நடிகரிடமிருந்து கேள்விப்பட்டபோது, நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மெயில் அல்லது மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன்.


நீங்கள் என்னை தொடர்பு கொண்ட ஐடி இப்போது என்னிடம் இல்லை, அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது எண் மாறிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மேலும் அந்த படத்தில் எனது பெயர் இருப்பதால், மிகவும் ஆவலடன் இந்த படத்தை எதிர்பார்க்கிறேன். இப்படிக்கு சியான் விக்ரம் என்ற கென்னடி” என பதிவிட்டு இருந்தார்.