தமிழ் சினிமா ரசிகர்களால் “சீயான்” என கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் இன்றோடு திரைத்துறையில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பரமக்குடி கண்ட கலைஞன்
தமிழ் சினிமாவை இந்த ஊரில் இருந்து தொடங்கலாம் என சில பிரபலங்களில் சொந்த ஊரை குறிப்பிடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பரமக்குடி மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து தான் தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் கமல்ஹாசன் வருகை தந்தார். நடிப்புக்காக உயிரைக்கூட கொடுக்கலாம் என்ற அளவுக்கு மிகுந்த மெனக்கெடல் கொண்டவர். அவரின் பல கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன சினிமாவின் வளர்ச்சிக்கு உதவிகரமாகவே உள்ளது.
அப்படியான ஊரில் இருந்து வந்தார் விக்ரம். கென்னடி ராஜ் விக்டர் தான் இவரின் ஒரிஜினல் பெயர். விக்ரமின் தந்தை வினோத் ராஜ் தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிந்த நடிகர். இப்படிப்பட்ட கலையுலக பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் பரமக்குடியில் இருந்து சினிமா கனவுடன் சென்னை வந்த விக்ரமுக்கு ஆரம்பத்தில் பல நெருக்கடிகளும், தடைகளும் ஏற்பட்டது.
சொல்லப்போனால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது சரியாக அமையவில்லை. காத்திருந்தால் காலம் நமக்கானதாக மாறும் என்பதற்கு சினிமாவில் மிகப்பெரிய உதாரணம் என்றால் அது விக்ரம் தான். அவர் நடிப்பின் மீது எவ்வளவு பெரிய பற்று கொண்டிருந்தார் என்பது அவரின் கேரக்டர்களுக்கான உழைப்பால் பார்த்தால் அறிந்துக் கொள்ள முடியும்.
ரஜினி, கமலுக்கு பிறகு விக்ரம் தான்
சினிமா துறையில் இன்றைய காலக்கட்டத்தில் தான் ரஜினி, கமலுக்கு பிறகு வயதில் மூத்தவர் விக்ரம் தான். ஆம் அவர் ரசிகர்களிடம் பிரபலமாகும் போது வயது 33.மாடலிங் துறையில் கால் பதித்து சில நிறுவன விளம்பரங்களில் நடித்த விக்ரம், 1990 ஆம் ஆண்டு ”என் காதல் கண்மணி” படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து தந்து விட்டேன் என்னை, மீரா, உல்லாசம், புதிய மன்னர்கள், ஹவுஸ் ஃபுல் என பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்பது விக்ரமுக்கு கிடைக்கவே இல்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் போராடினார்.
இப்படியான நிலையில் 2000 ஆம் ஆண்டு சேது படம் வெளியானது. கிட்டதட்ட சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பின் தான் அவரை ஹீரோவாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அதுவும் எப்படி என்றால் காலத்துக்கும் தன்னை ரசிகர்கள் மறக்க முடியாத நடிப்பை சேது படத்தில் வழங்கியிருந்தார். தன்னால் ஒரு கேரக்டருக்கு உயிரைக் கொடுத்து உழைக்க முடியும் என நிரூபித்தார். சேது படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்க கிட்டதட்ட 15 கிலோ எடை குறைத்தார். அர்ப்பணிப்பு மிக்க கலைஞனை திரையுலகம் கொண்டாட தொடங்கியது
வித விதமான கேரக்டர்கள்
விக்ரம் கேரியரை எடுத்துக் கொண்டால் காசி , சாமி, தில், தூள், ஜெமினி, சாமுராய், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, தெய்வ திருமகள், ராவணன், ஐ, கடாரம் கொண்டான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னை முன்னிறுத்திய இந்த படங்களில் பரீட்சார்த்த முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பார். கேரக்டரில் வித்தியாசம் காட்டுவது தொடங்கி உடலமைப்பில் மாற்றம் கொண்டு வருவது வரை இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என சொல்லி அடிப்பவர்.
விக்ரமை நடிகர் என்ற வட்டத்துக்குள் மட்டும் சுருக்க முடியாது. டப்பிங் கலைஞராக, பாடகராக என பல துறைகளில் அசத்துவார். செம ஜாலியான நபர் என அவரது நட்பு வட்டத்தில் கேட்டால் சொல்வார்கள். அந்த அளவுக்கு தன்னைச் சுற்றி எப்பவுமே பாசிட்டிவ் வைப்ஸ் ஆக வைத்துக் கொள்ளும் விக்ரமின் வெற்றிப் பயணத்துக்கு எல்லை என்பதே இல்லை.. வாழ்த்துக்கள்..!