நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும் கோலிவுட் நடிகருமான சண்முகபாண்டியனின் புது லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா, அரசியல் என இரண்டு தனி முத்திரை பதித்து தன் ரசிகர்களையும் தொண்டர்கள் பட்டாளத்தையும் கட்டிப் போட்டிருப்பவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என வாஞ்சையாக அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், எந்தப் பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தவர்.
சினிமா அறிமுகம்
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள விஜயகாந்த், முன்னதாக தன் திரை வாரிசாக தன்னுடைய இளைய மகன் சண்முக பாண்டியனையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
2015ஆம் ஆண்டு ’சகாப்தம்’ எனும் படத்தின் மூலம் சண்முக பாண்டியன் கோலிவுட்டில் கால் பதித்த நிலையில், இப்படத்தில் விஜயகாந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் தோல்வியைத் தழுவியது.
எதிர்மறை விமர்சனங்கள்
அதனைத் தொடர்ந்து ’மதுரை வீரன்’ என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்த நிலையில், அப்படமும் தோல்வியைத் தழுவி, மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து சினிமாவில் இருந்து விலகி அரசியல் பாதையில் தேமுதிகவிலேயே சண்முக பாண்டியன் பயணிக்கத் தொடங்கினார். எனினும் தொடர்ந்து ஒர்க் அவுட், தோற்றத்தை பராமரித்தல் என முழு வீச்சில் சினிமாவில் கம் பேக் கொடுக்க தயாராகியபடியே இருந்து வந்தார் சண்முக பாண்டியன்.
இந்நிலையில் இயக்குநர் சசிகுமார் 'குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி திரைப்படமாக எடுக்க உள்ள வெப் சீரிஸில் சண்முக பாண்டியன் கம்பேக் தர உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கேற்றவாறு முன்னதாக பிரஞ்சு தாடி, குடுமி என ஃபாரின் மாடல்கள் போல் தோற்றத்தை மாற்றி ’ரக்கட் பாய்’ லுக்கில் தன் இன்ஸ்டா பக்கத்தில் சண்முக பாண்டியன் புகைப்படங்களை ப் பதிவிட்டுள்ளார்.
இவரது கலக்கலான இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.