வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது என்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. தினமும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஜய் குறித்த மற்றொரு செய்தி இன்று வைரலாகி வருகிறது. 


 



நாயகனாகும் விக்ரமன் மகன்:


தமிழ் சினிமாவில் பல தரமான குடும்பம் சார்ந்த செண்டிமெண்ட் படங்களை இயக்கி ஒட்டுமொத்த பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்தவர் இயக்குநர் விக்ரமன். கமர்ஷியல் நடிகராக மசாலா படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஜய் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த 'பூவே உனக்காக' திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் கேரியர் கிராப் ஏறுமுகமாகவே இருந்து இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக திகழ்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் பேமிலி ஆடியன்ஸை மொத்தமாக கவர துவங்கினார் நடிகர் விஜய். 


தற்போது இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சூரிய கதிர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில் கே.எஸ். ரவிக்குமாரின் ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள 'ஹிட் லிஸ்ட்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் சரத்குமார், முனீஷ்காந்த், ஸ்ம்ருதி வெங்கட், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 







இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா தனது முதல் படத்தின் ரிலீசுக்காக காத்துகொண்டு இருக்கும் வேளையில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவரின் ஆசிகளை பெற்றார். அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து "உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள். மேலும் என்னையும் எங்களின் ஹிட்லிஸ்ட் படத்திற்கு அளித்த ஆதரவிற்கும் நன்றிகள்" என பகிர்ந்து இருந்தார்.