மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த கூட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த தகவல்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் படங்களில் நடிக்கும் விஜய், மறுபக்கம் சத்தமே இல்லாமல் அரசியல் பயணத்திலும் அடியெடுத்து வைத்து வருகிறார். மக்கள் இயக்கத்தினர் வேறு அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடாது என உத்தரவிட்டது, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, நற்பணிகள் செய்வது என தொடர்ந்து மக்களுடன் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பில் இருக்கும்படியான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதில் அரசியல் தொடர்பாக சில கருத்துகளை மறைமுகமாக பேசினார். அவரது பேச்சு பெரும் பேசு பொருளாக மாறியது.
இதனிடையே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு அனைவருடன் விஜய் தனித்தனியாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், ‘தான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்றும், முழு கவனமும் அரசியலில் தான் இருக்கும்’ எனவும் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல்களை பகிர்ந்து கொண்ட மக்கள் இயக்க நிர்வாகிகள், ‘விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். கண்டிப்பா ஒருநாள் அவர் முதல்வர் நாற்காலியில் அமருவார்’ எனவும் தெரிவித்துள்ளனர்.