நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’ . இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் நேர்காணல்களில் படக்குழுவினர் கூறும் தகவல்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 


தமன் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. விஜய் பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் யூட்யூப்பில் 70 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆம் பாடல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 






முன்னதாக வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது.  அதேசமயம் வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் முடித்து வைக்கப்பட்டது. இதேபோல்  உரிய அனுமதியின்றி படப்பிடிப்பில் யானைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க விலங்குகள் நல வாரியம் வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 


இதனையடுத்து பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என பட அறிவிப்பு வெளியான போதே கூறப்பட்ட நிலையில், அதன்பிறகு ரிலீஸ் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். மேலும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டதால் வாரிசு படம் ரிலீசாகுமா இல்லையா என்ற கேள்வியெழுந்தது. 


இந்நிலையில் வாரிசு படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகும் என நள்ளிரவில் புது போஸ்டரோடு படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.