விஜய் பிறந்தநாள்


வரும் ஜூன் 22ஆம் தேதி நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நடிகர் விஜய் நடிப்பை முழுவதுமாக கைவிடப்போவதாக அறிவித்தார்.  இதனால் விஜய்யின் அடுத்த இரண்டு படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் 69ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. 


ரீரிலீஸ் ஆகும் விஜய் படங்கள்


அரசியல் தலைவராக விஜய் உருவெடுத்த பின் நடிகர் விஜய்யை திரையில் பார்க்க முடியாது வருத்தத்தில் விஜய்யின் எல்லா படங்களையும் கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். கடந்த மாதம் வெளியாகிய கில்லி படம் தியேட்டர்களில் வசூலில் சக்கை போடு போட்டதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். இப்படியான நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளை = முடிந்த அளவிற்கு சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளார்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் பட தயாரிப்பாளர்கள். அந்த வகையில் விஜய் நடித்து ஹிட் ஆன ஒரு சில படங்கள் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப் பட இருக்கின்றன. 


அதன்படி வெளிநாடுகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் ரீரிலீஸ் ஆகிறது. இங்கிலாந்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தைப் பார்க்கும் விதமாக அஹிம்ஸா என்டர்டெயின்மெண்ட் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 


துப்பாக்கி ரீரிலீஸ்






தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விஜய் நடித்து கடந்த 2012 ஆம்வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த துப்பாக்கி படம்  திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜம்வால், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். ஆக்‌ஷன் ட்விஸ்ட் என முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்த துப்பாக்கி படம் விஜய் நடித்த படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் இண்டர்வல் ப்ளாக் காட்சி திரையரங்கத்தை அதிரவைத்தது என்று சொல்லலாம் . தற்போது கிட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை மீண்டும் கொண்டாடுவதற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.