நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்தான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களால்  ‘மக்கள் செல்வன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போதைய சூழலில் இவர் இல்லாத படங்களே இல்லை என்பது போல மாதத்திற்கு ஒரு படம் நடிகர், வில்லன், சிறப்பு தோற்றம் என வித்தியாசமான கேரக்டர்களோடு வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படம் உருவாகி வருகிறது. 


5 வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வரும் விஜய் சேதுபதியின் இந்த படத்தை புதுமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர்  படத்தில் மேகா ஆகாஷ், கரு.பழனியப்பன், மறைந்த நடிகர் விவேக், இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 






குறிப்பாக படத்தில் இடம்பெறும் நடிகர் சிலம்பரசன் பாடிய முருகன் பாடல் ஒன்று இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு தீபாவளி அன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதற்கிடையில் இந்தாண்டு மட்டும் கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன், விக்ரம் ஆகிய படங்களில் நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 


ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் குறித்து எந்தவித அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் குழம்பமடைந்தனர். ஆனால் அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அப்படத்தின் ரிலீஸ் எப்போது  என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.