நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து "இனி படங்களில் நடிக்கப் போவதில்லை" என்று அறிவித்தார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் ’கலகத்தலைவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் 'இனி படங்களில் நடிக்கப் போவதில்லை' என்ற உதயநிதியின் கூற்றால் 'மாமன்னன்' திரைப்படமே உதயநிதியின் கடைசி திரைப்படம் என்று முடிவானது.
ஆனால் அதற்கு முன், கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் உதயநிதியின் திடீர் முடிவால், அது சாத்தியப்படவில்லை. அதனால் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்று கேள்வி எழுந்தது. அந்த இடத்தை தற்போது விஜய் சேதுபதி நிரப்பப் போகிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
இது குறித்து கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான தகவல்களின்படி, விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் நல்ல நட்புறவை கொண்டுள்ளனர். அதனால் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கமல் நினைப்பதாகவும்; ஆனால் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாகவில்லை என்றும் கூறியுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கமலின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், இது கமல் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் ஆகும். இந்த கூட்டணி ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் இணைந்திருந்தது;மேலும் கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க போவதாகவும் கூறியிருந்தார். அந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.
இது மட்டுமின்றி மணிரத்னத்துடன் கமல்ஹாசன் ஒரு படத்தில் இணைகிறார். கமல் மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. அதேபோல் விஜய் சேதுபதியும் மிக பிஸியாக இருந்து வருகிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கத்ரினா கைஃப் உடன் 'மேரி கிறிஸ்மஸ்' திரைப்படத்திலும் அவர் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.