மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, ரத்தன் டாடா கூறியதாக நடிகர் விஜய் சேதுபதி, ஒரு கூற்றை தெரிவித்த நிலையில், அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
ரத்தன் டாடா மறைவு:
தொழிலதிபர் ரத்தன் டாடா, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி காலமானார். அவரது தொழில் முறையானது தொழில்களை முன்னேற்றத்திற்கு எடுத்துச் சென்றது மட்டுமன்றி, இந்திய பொருளாதாரத்தையும் முன்னேற்றிச் செல்வதில் முக்கியபங்கு வகித்தது , வகித்து வருகிறது.
மேலும், அவரது தொண்டுகள், தொழில்துறையின் செயல்பாடுகள் மற்றும் அறக்கட்டளை மூலம் செய்து வரும் உதவியால் சாமானிய மக்களும், அவரது மறைவால் வருத்தம் தெரித்து, இரங்கல் தெரிவித்தனர்.
விஜய் சேதுபதி கருத்து:
மேலும், பலர் ரத்தன் டாடாவின் உத்வேகம் அளிக்கும் உரை மற்றும் கூற்றுக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான விஜய் சேதுபதியின் கருத்தானது, பேசு பொருளாகி உள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்த விஜய் சேதுபதி, தனது நடிப்பு திறமையால்,சினிமாவில் வலுவான இடத்தை பிடித்துள்ளார். இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும் , நடிப்பு திறமையும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் என்றே சொல்லலாம். மேலும், அவர் அவ்வப்போது, தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பார். இது பலருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்பதால் , பலரும் இவரது கருத்துக்களை பின்தொடர்வர். இதன் காரணமாக கூட பிக்பாஸ் தொகுத்துவழங்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
ரத்தன் டாடா கூறவில்லை:
இந்நிலையில், தொழிலதிபர் டாடா மறைவின் போது, அவர் தெரிவித்ததாக ஒரு கூற்றானது பலராலும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜய் சேதுபதியும் , அந்தகூற்றை பகிர்ந்திருந்தார். ஆனால் இந்த கூற்றானது ரத்தன் டாடா கூறியதில்லை.
அந்த கூற்று:
“சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை; நான்முடிவுகளை எடுப்பேன், பின்னர் அவற்றை சரியானதாக அமைத்துக் கொள்வேன்”
இந்த கூற்றானது , சில ஆண்டுகளுக்கு முன்பே ரத்தன் டாடா கூறியதாக வைரலானது. ஆனால், இதுகுறித்து ரத்தன் டாடாவிடமே கேட்கப்பட்டது,
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்“ இதை நான் கூறியதில்லை, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி தெரிவித்தது தவறு என்று , ரத்தன்டாடா கூறியதை மேற்கோள்காட்டி பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிலர் எதிர்மறையாக விமர்சித்தாலும், விஜய் சேதுபதி கூறியது உண்மையற்ற தகவலாக இருந்தாலும், நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான் கூறினார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.