இறைவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி தனது முதல் சம்பளத்தில் தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 


இறைவன்


ஜெயம் ரவி - நயன்தாரா நடித்திருக்கும் இறைவன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


‘தனி ஒருவன்’ திரைப்படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி - நயன்தாரா இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, அழகம் பெருமாள், பகவதி பெருமாள், விஜயலட்சுமி மற்றும் வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சைக்காலாஜிகல் த்ரில்லர் ஜானரில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


இவருகிட்ட ஜாக்கிரதையா இருங்க..


படத்தின் ரிலீஸை ஒட்டி நேற்று சென்னையில் இறைவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, இயக்குநர் அகமத், மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி நடிகர் ஜெயம் ரவி  குறித்து பேசும்போது “இயக்குநர் அகமதுடன் நான் வேலை செய்தது இல்லை. ஆனால் இவர் தன் படங்களுக்கு வைக்கக்கூடிய பெயர்கள் எனக்கு பிடிக்கும். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் என்று தன் படங்களுக்கு இவர் வைக்கும் டைட்டில்கள் பிரமாதமாக இருக்கும்.


இறைவன் என்கிற டைட்டிலும் எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வார்த்தை இறைவன். ஆனால் இப்படியான ஒரு வார்த்தையை டைட்டிலாக வைத்து எல்லாரையும் பயமுறுத்தி இருக்கிறார் இயக்குநர். அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இறைவன் என்கிற டைட்டில் வைத்து சைக்காலஜிக்கலான ஒரு கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார். 


இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் பயமுறுத்தும் மாதிரி இருக்கிறது. ஆனால் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது” என்று விஜய் சேதுபதி பேசினார்.


தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, “நடித்து எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுவார்.  நான் நன்றாக இயக்கியிருக்கிறேன் என்று எனக்கு ஈஸியாக பெயர் கிடைத்துவிடும். நாம் இருவரும் சேர்ந்து நடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களை வைத்து ஒரு படமாவது எடுக்க ஆசைப்படுகிறேன். எனக்காக சிறிது நாட்களுக்கு நீங்கள் உங்களுடைய கால்ஷீட்டை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.


என்னுடைய முதல் படம் சம்பளம்


 தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி “என்னுடைய இரண்டாவது படத்திற்காக நான் இயக்குநர் மோகன் ராஜா சார் அலுவலகத்திற்கு என்னுடைய புகைப்படத்தை கொடுக்கப் போயிருந்தேன். அப்போது அங்கு ஜெயம் ரவியை பார்த்தேன். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவிதான். என்னுடைய முதல் படத்திற்கு எனக்கு 250 ரூபாய் கொடுத்தார்கள்.


என்னுடைய இரண்டாவது படத்திற்கு எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய இன்க்ரிமெண்ட் மாதிரி இருந்தது. இந்தப் படத்தில் ஜிம் பாய் ரோலில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏதோ பெரிய கதாபாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.


படத்தில் நதியா மேடம் ஒரு மாஸான டயலாக் பேசி ஜெயம் ரவிக்கு ஒரு இண்ட்ரோடக்‌ஷன் ஷாட் வைத்திருப்பார்கள். அப்போது ஜெயம் ரவி மேலே நின்றுகொண்டிருக்க நான் கீழே நின்றுகொண்டிருப்பேன்.


அவருடன் நடிக்கத் தயாராக இருக்கிறேன்


ஜெயம் ரவி ஒரு நல்ல மனிதர். போகன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னைகள் காரணமாக என்னால் நடிக்க முடியவைல்லை. இனிமேல் அப்படியான வாய்ப்பு வந்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.