மகாராஜா
விஜய் சேதுபதி நடித்துள்ள 50 ஆவது படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ் , முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.ஏல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மகாராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து நேற்று ஜூன் 11 ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. துபாயின் அதி உயர கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் முன்னோட்டம் வெளியானது.
3 நிமிடத்திற்கு ஒரு கோடி
முன்பாக சென்னையில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தான் துபாயில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை சென்றதைப் பற்றியும் துபாயில் தான் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்துகொண்டார். முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப் படும் மெர்லின் தலைமையிலான W.I.T Events நிறுவனம் மகாராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை துபாயில் ஒருங்கிணைத்தது. துபாயின் அதி உயர கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் திரையிடப் பட்டது. இதுவரை புர்ஜ் கலிஃபாவில் திரையிட ஒரே படம் கமல்ஹாசன் நடித்த விக்ரம் தான். கமல்ஹாசனைத் தொடர்ந்து புர்ஜ் கலிஃபாவில் விஜய் சேதுபதியின் படத்தின் முன்னோட்டம் திரையிடப் பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப் படுகிறது. மேலும் புர்ஜ் கலிஃபாவில் 3 நிமிட டிரைலர் திரையிடுவதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 1 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் 12 ஆயிரம் சம்பத்திற்கு தான் வேலை செய்து துபாயில் ஆங்காங்கே இருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் வெண்டிங் மிஷின்களை பல நாட்கள் ஏக்கமாக பார்த்துள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்தார். தற்போது அவரது படத்தின் 3 நிமிட முன்னோட்டத்திற்கு 1 கோடி செலவிடப் பட்டுள்ளது விஜய் சேதுபதியின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.