மகாராஜா படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 


நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகன் தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, அருள்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “மகாராஜா”. இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் பற்றி பாசிட்டிவான கமெண்டுகள் வெளியானதால் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 


இதனிடையே மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “மகாராஜா படத்தின் கதையை கேட்கும்போது மிகப்பெரிய பிரமிப்பும், நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்துக்கு முன்னாடியும் எழும். நடித்து முடித்து விடுவோம். கதை கேட்கும்போது மட்டும் தான் கதை ஈர்க்கக்கூடிய பகுதிகள் எல்லாம் தெரியும். நடித்தால் அந்த கணக்கெல்லாம் தெரியாது.






நடித்து முடித்து விட்டு இந்த படம் எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பதை எல்லாரையும் கேட்டு தான் முடிவு செய்வோம். ஆனால் மகாராஜா படத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். தயாரிப்பாளருக்கு சராசரியாக போட்ட காசை எடுப்போம் என நினைத்தோம். என்னுடைய முந்தைய சில படங்கள் சரியாக போகவில்லை. இனிமேல் விஜய் சேதுபதிக்கு கூட்டமா வரப்போகுதுன்னு சிலர் சொன்னதாக நண்பர் சொன்னார். 


இந்த மாதிரி நிறைய விஷயங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக இப்படம் பண்ணவில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் தான் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் தான் பதிலும் சொல்கிறார்கள். அந்த படமாக மகாராஜா அமைந்ததில் சந்தோசமாக உள்ளது. பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்பட்ட அந்த நாள் இரவு ரொம்ப இனிமையாக இருந்தது. மக்களுக்கும், ஊடக துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.