நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில்தான் மிகப்பெரிய இடத்தை பிடிக்க காரணம் யார் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார். 


பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவகாற்று’ படம் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, மடோனா செபாஸ்டியன் என பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி தற்போது 50வது படம் வெளியாகவுள்ளது.


குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலம்ன் சுவாமிநாதன் இயக்கும் இந்த படத்துக்கு ‘மகாராஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் நட்டி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், அனுராக் காஷ்யப், நடிகைகள் மமதா மோகன்தாஸ், அபிராமி,  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இதனிடையே மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நாற்காலியில் கையில் அரிவாளுடன் ரத்தமுமாக விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, நெகிழ்ச்சியுடன் பல விஷயங்களை குறிப்பிட்டார். 


அதன்படி, “போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஊடகங்களை அழைக்க வேண்டுமா என கேட்டேன். ஆனால் 50வது படம் என்பதால் கண்டிப்பாக அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொன்னார்கள்.எனக்கும் அது சரியெனப் பட்டது. தப்போ, சரியோ, நீங்க பாராட்டுறீங்களோ இல்லை திட்டுறீங்களோ எதுவாக இருந்தாலும் அது எனக்கு உறுதுணையாக மட்டுமே இருந்துள்ளது. அனைத்துக்கும் நன்றி. உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். 






50 படம் என்பது என்னோட வாழ்க்கையில நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. இந்த மாதிரி எண்கள் எல்லாம் மைல்கல் போன்றது. அனுபவம் என்பது பொறுமையும், ஞானத்தையும் கொடுக்கும் என நம்புறேன். எனக்கு நல்ல அனுபவங்களை கொடுத்த ரசிகர்கள், இயக்குநர்கள், சினிமாவைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


என் வாழ்க்கையில் முக்கியமான புள்ளியை வைத்தவர் அருள்தாஸ் தான். நாங்கள் நான் மகான் அல்ல படம் நடிக்கும்போது பெரிய அளவில் பழக்கமில்லை. டப்பிங் பணியின்போது தான் பேசினோம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக அவரை பரிந்துரை செய்தேன். நான் ஒருநாள் போனை வீட்டில் வைத்து வாக்கிங் சென்று விட்டேன். திரும்பி வந்து என்னவென்று பேசினேன். அப்போது சீனு ராமசாமி இயக்கும் ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்துக்கு உன்னைத்தானே சொல்லியுள்ளேன். அப்படித்தான் அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.