விடுதலை படத்தின் 2ஆம் பாகத்தில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. . எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
மேலும் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் விடுதலை படத்தில் இடம் பெற்றிருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்ற நிலையில் முதல் பாகம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. விடுதலை படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இப்படியான நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் பற்றி நேர்காணல் ஒன்றில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், “விடுதலை படத்தின் 2ஆம் பாகம் சிறப்பாக வந்துக் கொண்டிருக்கிறது.இதனை தாமதம் என சொல்வது சரி கிடையாது. ஒரு நிலப்பரப்பில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சவால்கள் என்பது உள்ளது. ஒவ்வொரு திரைப்படம் அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. நீங்கள் பார்த்த முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் விடுதலை இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இதில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும்.
வாத்தியார் கேரக்டரின் பயணம் என்பது நீண்ட நெடியது. எட்டு நாள் நடிக்க போன நான் 100 நாட்களை கடந்து நடித்து கொண்டிருக்கிறேன் என்பதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த கேரக்டர் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. விடுதலை படம் சிறுமலைக்காடு என்ற இடத்தில் ஷூட் செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு போகும் முன்னாடி விஷ பாம்பு எல்லாம் இருக்கும்ன்னு சொன்னதால் பயந்து போயிட்டேன்.
ஆனால் இப்ப ஷூட்டிங் முடிஞ்ச பிறகு மீண்டும் அந்த இடத்துக்கு போகமாட்டோமா, தங்க மாட்டாமா என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த காடும், அதன் அமையும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நிறைய பேசும். படத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார் வெற்றிமாறனையும், படத்தையும் ரொம்ப நம்பியதால் தான் இந்த படம் வளர்ந்துக் கொண்டே போனது” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.