நடிகர் விஜய் நடித்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘யூத்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மற்றுமொரு காதல் திரைப்படம்
தனது ஆரம்ப காலக்கட்டத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய். அவரின் படங்கள் இளம் வயதினருக்கு மட்டுமின்றி சிறுவர்கள், பெரியவர்கள் வரை ஏற்ற வகையில் இருந்தது. விஜய் தனது கேரியரை காதலில் இருந்து ஆக்ஷன் ஹீரோவாக 2002 ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னதாக கடைசியாக யூத் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருந்தார்.
விஜய்யின் சினிமா கேரியரில் 1998 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமுடன் படம் மிக முக்கியமானது. இந்த படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இதனாலேயே இயக்குநர் வின்சென்ட் செல்வாவுடன் 2வது முறையாக யூத் படத்தில் இணைந்தார். மேலும் இந்த படத்தில் ஷாகீன் கான், சிந்து மேனன், மணிவண்ணன்,விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
சிரு நவுதோ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் தான் இப்படம் உருவாக காரணம். தன்னை காயப்படுத்தியவர்களுக்கு கூட தீங்கு நினைக்காத விஜய், தன் வாழ்வில் நடந்த பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எப்படி கையாளுகிறார் என்பதே கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
விஜய்யின் கேரக்டர் அமைப்பே யூத் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற காரணமாக அமைந்தது. விஜய் காதலிக்கும் பெண்ணாக ஷாகீன் கானும், விஜய்க்கு நிச்சயம் செய்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணாக சிந்து மேனனும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத பாடல்கள்
யூத் படத்தில் மணி ஷர்மா முத்தான பாடல்களை கொடுத்திருந்தார். ஹரிஷ் ராகவேந்திரா குரலில் உருவான சக்கரை நிலவே பாடல் இன்றளவும் காதலை நினைத்து உருகுபவர்களின் தேசிய கீதமாக உள்ளது. மேலும் சகியே சகியே, அடி ஒன் இஞ்ச் டூ இஞ்ச் என டூயட் பாடல்களும், வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வையையும் தன்னம்பிக்கையையும் சொன்ன ‘சந்தோஷம் சந்தோஷம்’ பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிம்ரனுடம் ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
படத்திற்கு மிகப்பெரிய பலமாக நடிகர் விவேக்கின் காமெடி காட்சிகள் உதவியது. ஆக மொத்தம் பெயரைப் போல யூத் என்றும் இளமையான ஒரு படம் தான்...!