தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியான இவரது படங்களை கீழே வரிசையாக காணலாம்.



  1. கோயம்புத்தூர் மாப்பிள்ளை ( 1996)




நடிகர் விஜய் தனது தொடக்க காலத்தில் இருந்த காலம் அது. 1996ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அப்போதைய பொங்கல் வெளியீடாக இயக்குனர் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம்தான் கோயம்புத்தூர் மாப்பிள்ளை. விஜய், கவுண்டமணி காமெடி படத்தை அனைத்து தரப்பினரிடமும் எடுத்துச் சென்றது. இந்த படத்தில் நடிகை சங்கவி, கரண், வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.



  1. காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)




இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் காலமெல்லாம் காத்திருப்பேன். முதல் பாதியில் பணக்கார இளைஞனாகவும், இரண்டாம் பாதியில் சாதாரண ஊழியராகவும் விஜய் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார். குடும்பப் பாங்கான இந்த படத்தின் திரைக்கதையும், தேவாவின் இசையும் படத்தை வெற்றிப்படமாக்கியது. இந்த படத்தில் கரண், நாயகியாக டிம்பிள், ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.



  1. கண்ணுக்குள் நிலவு (2000)




புத்தாயிரத்தில் பொங்கல் வெளியீடாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கண்ணுக்குள் நிலவு. நடிகர் விஜய்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருந்த காலம் அது. மலையாள ஜாம்பவான் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்யும், ஷாலினியும் நடித்திருப்பார்கள். காதல் திரில்லர் படமான இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட். விஜய்க்கு புத்தாயிரத்தின் முதல் ஆண்டே  மெகாஹிட் ஆண்டாக தொடங்கியது.



  1. ப்ரண்ட்ஸ் ( 2001)




நடிகர் விஜய்யின் கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படம். இயக்குனர் சித்திக்கின் திரைக்கதையால் குடும்ப படமாக இந்த படம் வெளியானது. விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோரது நட்பும், அவர்களது குடும்ப உறவுகளும் படத்தின் திரைக்கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரமும், அவரது காமெடிகளும் ஆண்டுகளை கடந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விஜயை குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாற்றியதில் இந்த படத்திற்கும் முக்கிய பங்குண்டு.



  1. வசீகரா ( 2003)




இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சினேகா நடிப்பில் வெளிவந்த படம் வசீகரா. வேலையின்றி சுற்றித்திரியும் இளைஞனாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். படத்தில் அவரும், வடிவேலுவும் செய்யும் காமெடிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இவர்களுடன் நடிகை காயத்ரி ஜெயராமன், நாசர், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.



  1. திருப்பாச்சி (2006)




கில்லி படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் ஹீரோவாக தனது அவதாரத்தை தொடங்கிய விஜய்யின் மாசை இன்னும் அதிகரிக்கச் செய்த படம் திருப்பாச்சி. இயக்குனராக பேரரசிற்கு இதுவே முதல் படம். தீனா இசையில் வெளியான அத்தனை பாடல்களும் மெகா ஹிட். அண்ணன் தங்கை பாசத்தை கொண்டு கட்டமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாய் அமைந்தது. விஜய், திரிஷா காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. விஜயின் கேரியரில் திருப்பாச்சியின் வெற்றி மிகவும் முக்கியமான படம்.



  1. ஆதி (2007)




கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என்று மாஸ் வெற்றிகளை கொடுத்த விஜயின் நடிப்பில் 2007 பொங்கல் வெளியீடாக வந்த படம் ஆதி. ரமணா இயக்கத்தில் பழிவாங்கும் படலமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. விஜயின் முந்தைய மூன்று மெகாஹிட்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் சற்றே சறுக்கல்தான். ஆனாலும், குடும்ப திரைக்கதையிலே இந்த படமும் உருவாகியிருந்தது.



  1. போக்கிரி ( 2008)




நடிகர் விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் எப்போதும் மறக்க முடியாத ஆக்ஷன் விருந்து போக்கிரி. பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி அந்தாண்டு கோலிவுட் வட்டாரத்தில் அதிக வசூலைக்குவித்த படமாக திகழ்ந்தது. மணிசர்மா இயக்கத்தில் ஓபனிங் சாங் முதல் கடைசி பாடல் வரை திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் போட்டனர். விறுவிறு திரைக்கதை, விஜயின் லுக், விஜயின் டயலாக் பாதி இளைஞர்களை அவரின் ரசிகர்களாக மாற்றியது. அப்போது, பல கடைகளிலும் போக்கிரி டிரெஸ் விற்பனையில் டிரெண்டிங் ஆனது.



  1. வில்லு ( 2009)




போக்கிரி படத்திற்கு பிறகு விஜயும், பிரபுதேவாவும் இணைந்த கூட்டணி என்பதால் படத்தின் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பாடல்களும் முன்பே ரிலீஸ் ஆகி பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.



  1. காவலன் ( 2011)





வில்லுவில் தொடங்கி வேட்டைக்காரன் வரை தோல்வியால் துவண்டு கொண்டிருந்த விஜய்க்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக காவலன் அமைந்தது. இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான இந்த படம் மீண்டும் விஜயை குடும்ப நாயகனாக அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்தது. ஆக்‌ஷனை குறைத்து, நடிப்பை அதிகப்படுத்தி விஜயை அழகான கல்லூரி மாணவராக சித்திக் காட்டியிருப்பார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.



  1. நண்பன் ( 2012)




இந்தியில் வெளியான த்ரீ இடியட்ஸ் தமிழில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யாவிடம் இருமுறை கதை சென்று, பின்னர் விஜயிடம் வந்தது, ஷங்கர் இயக்கிய முதல் ரீமேக் திரைப்படம். இந்தியில் மெகா ஹிட் அடித்ததைப் போலவே தமிழிலும் மெகாஹிட். விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்தும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ப்ரண்ட்ஸ் படத்தை போல நண்பன் படமும் விஜய்க்கு கொண்டாட்டமான படமாக அமைந்தது.



  1. ஜில்லா (2014)




இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜில்லா. நடிகர் மோகன்லாலும், விஜய்யும் இணைந்து நடித்த படம். விஜயின் தோற்றம் அவரை பலரையும் ரசிக்க வைத்தது. அவரது புதிய கெட்டப்  அப்போது ட்ரெண்டிங்காகவும் மாறியது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அந்தாண்டு அமைந்தது.



  1. பைரவா (2017)




அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதனின் இயக்கத்தில் வெளியான படம் பைரவா. நாயகியை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் நாயகனாக விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார். குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதையால் பைரவா படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.