5 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 


இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். சமீபத்தில் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 






பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படம் வழக்கம்போல விஜய்யின் பிற படங்களைப் போல சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் வாரிசு படத்துக்கு சிக்கல் எழுந்தது. 






இந்நிலையில் தான் விஜய் 5 ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.முதற்கட்டமாக சேலம்,நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் பனையூர் இல்லத்தில் சுடச்சுட பிரியாணி தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்கும் ரசிகர்கள் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது. 






இந்த சந்திப்பின் பின்னணிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வில் விஜய் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. அதேசமயம் தகவலறிந்து பிற பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.