கேரளா சென்றுள்ள நடிகர் விஜய் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தோடு மட்டுமல்லாமல் அவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். Aa






தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். இவர் லியோ படத்துக்குப் பின் தற்போது G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கும் கோட் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம், மோகன், பார்வதி நாயர், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். 






இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் விஜய் நேற்று கேரளா சென்றார். அவரை காண விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் வெள்ளத்துக்கு நடுவே ஹோட்டல் அறையை நோக்கி காரில் சென்றார் விஜய். ஆனால் வழியெங்கும் வாகனங்களில் ரசிகர்கள் துரத்திக் கொண்டே சென்றனர். 


ரசிகர்களின் ஆர்வம் மிகுதியால் விஜய் பயணித்த கார் பலத்த சேதமடைந்தது. கண்ணாடி உடைந்த நிலையில் இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. கேரள ரசிகர்களின் அன்பை பார்த்து ஒரு கணம் தமிழ்நாட்டு ரசிகர்களும், தமிழ் திரையுலகினரும் திகைத்து தான் போகினர். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பின் விஜய் கேரளாவுக்கு சென்றுள்ள நிலையில் போஸ்டர், பேனர், கட் அவுட் என எங்கு திரும்பினாலும் விஜய் தான் தெரிகிறார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதனிடையே அங்குள்ள மைதானம் ஒன்றில் விஜய் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்தார். தொடர்ந்து விஜய் அனைவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.