நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரின் 70வது படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


முன்னணி நடிகர் விஜய்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் லியோ படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் முடிவடைந்து விட்டது. ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாக உள்ளது. 


இப்படியான நிலையில் விஜய்யின் 69வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் கடந்த மாதம் படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் வருகை இருக்கும் என கூறப்படுகிறது. 


விஜய்யின் அரசியல் பயணம் 


சமீபகாலமாக விஜய் அரசியல் பயணம் தொடர்பான நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக அவரின் மக்கள் இயக்கம் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.கிட்டதட்ட விஜய் அரசியல் வருகை உறுதியாகி விட்ட நிலையில் நேற்று, மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என விஜய் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 


ஷங்கருடன் கூட்டணி 


இப்படியான நிலையில் விஜய்யின் 70வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கருடன் கூட்டணி வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய்யை வைத்து 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தை ஷங்கர் இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர், தமிழில் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். இப்படியான நிலையில் ஷங்கருடன் விஜய் இணையும் படம் அரசியலை மையமாக கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் அரசியல் வருகை தாமதமாகுமோ என விஜய் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.