தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிவந்த நடிகர் விஜய் ஒரு இளம் பெண்ணின் செயலால் கடுப்பாகியுள்ள வீடியோ இணைய்தளத்தில் வைரலாகி வருகிறது.


நிவாரணம்:


கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் ஏராளமான மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளில் இருந்து மீள ஒரு வார காலம் எடுத்துள்ளது. இரண்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ 6,000 வழங்கப்ய்பட்டு வருகிறது. 


நிவாரணம் வழங்கிய விஜய்


வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுவருகின்றன. இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற நடிகர் விஜய் நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கேடிசி நகர் பகுதியில் உள்ள மாதா மாளிகை எனப்படும் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். கிட்டதட்ட ஆயிரம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். 


விஜய்யை கடுப்பாக்கிய இளம் பெண்






இந்த நிகழ்ச்சியில் விஜய்யிடம் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது நிவாரணப் பொருட்களை மறுத்துவிட்டு விஜயுடன் செல்ஃபி மட்டுமே எடுத்துக் கொண்ட இளம் பெண்ணால் விஜய் கோபமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் நிவாரணப் பொருட்கள் வைத்திருக்கும் விஜய்யின் காலில் விழுந்தார் பெண் . உடனே கையில் இருந்த பொருட்களை டேபிளில் வைத்த விஜய் கடுமையான முகத்துடன் இடுப்பில் கை வைத்து நின்றார்.


இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் தனக்கு நிவாரணப் பொருட்கள் வேண்டாமா? என்று அவர் கேட்க  வேண்டாம் என்று அந்த பெண் பதிலளித்து செல்ஃபி மட்டுமே எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தியபடி விஜய் நிற்கும் இந்த வீடியோ இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


அனைவருடன் செல்ஃபி


 நிவாரணப் பொருட்கள் வழங்கி முடித்தப் பின் நடிகர் விஜய் அனைவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளது அவரை பார்க்க வந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.